“குடி.. குடியை கெடுத்தக் கதை”: நண்பனுக்காக மனைவியை கொன்று குழந்தையை அநாதையாக்கிய முச்சக்கரவண்டி சாரதி

இந்தியா, சென்னையையடுத்த பெருங்குடி, இந்திரா தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார் (30). இவர் ஒரு முச்சக்கரவண்டி சாரதியாவார். இவரின் மனைவி மணிமேகலை (25). இவர்களுக்கு இரண்டு வயதில் மகன் உள்ளார்.

நல்ல குடிப்பழக்கம் உள்ள உதயகுமார், வீட்டிலேயே நண்பர்களுடன் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டவராவார். கடந்த 25-ம் திகதி நண்பர் மாணிக்கவேலை உதயகுமார் வீட்டுக்கு அழைத்துள்ளார். பிறகு இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது வீட்டுக்கு மணிமேகலை வந்துள்ளார். உதயகுமாரிடம், `ஏன் இப்படி வீட்டில் நண்பர்களுடன் மது அருந்துகிறீர்கள். வீட்டில் குடியிருக்க வேண்டாமா?’ என்று மணிமேகலை கேட்டுள்ளார். இதனால் உதயகுமாருக்கும் மணிமேகலைக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மாணிக்கவேலும் மணிமேகலையைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மணிமேகலை, துரைப்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பொலிஸார் மாணிக்கவேலை அழைத்து விசாரித்தனர். பிறகு அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். பொலிஸ் நிலையத்தில் நடந்த தகவலை மாணிக்கவேல், உதயகுமாரிடம் கூறினார். நண்பர் மீது புகார் அளித்தது மட்டுமல்லாமல் பொலிஸார் எச்சரித்த சம்பவம் உதயகுமாருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

வீட்டுக்கு வந்த உதயகுமார், மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். அப்போது, கத்தியால் மணிமேகலையைக் குத்தியதாகத் தெரிகிறது. அவரது அலறல் சத்தம் கேட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு ஓடிவந்தனர். இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய மணிமேகலையை மீட்டு ராஜீவ்காந்தி அரசு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிமேகலை உயிரிழந்துள்ளார். இதையடுத்து துரைப்பாக்கம் பொலிஸார் மணிமேகலையின் சடலத்தைக் கைப்பற்றி அரச வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவியைக் கொலை செய்த குற்றத்துக்காக உதயகுமார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து துரைப்பாக்கம் பொலிஸார் கூறுகையில்,

“மணிமேகலை கொடுத்த புகாரில், சம்பவத்தன்று என்னுடைய கணவர் உதயகுமாரும் அவரின் நண்பர் மாணிக்கவேலும் வீட்டின் அருகே மது அருந்தினர். அந்தச் சமயத்தில் நான் வீட்டுக்குள் உடைமாற்றிக் கொண்டிருந்தேன். திடீரென போதையில் மாணிக்கவேல் உள்ளே வந்துவிட்டார். இதனால் அவரைக் கண்டித்தேன். அப்போது மாணிக்கவேல் என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டினார். அதை என் கணவர் வேடிக்கை பார்த்தார். எனவே, மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பேரில் விசாரணை நடத்தி மாணிக்கவேலை எச்சரித்து அனுப்பினோம். அதன்பிறகு மணிமேகலையை உதயகுமார் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த உதயகுமாரை பெங்களூரில் இன்று பிடித்துள்ளோம். அவரிடம் விசாரணை நடந்துவருகிறது” என்றனர்.

மதுவால் உதயகுமாரின் மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார். அவர்களின் 2 வயது மகனும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். நண்பனுக்காக மனைவியைக் கொலை செய்த சம்பவம் பெருங்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!