தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்!

தெலுங்கானாவில் முதல் மந்திரி சந்திர சேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. இதனிடையே, தெலுங்கானா ஆளுநராக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கடந்த 2014ம் ஆண்டு முதல் தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து வருகிறார். அவரது பதவி காலம் வருகிற டிசம்பரில் முடிவடைய உள்ளது. அவர் ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில் தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட கூடும் என கூறப்படுகிறது. கேரள ஆளுநராக இருந்து வந்த சதாசிவம் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஆரிப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இதேபோன்று இமாச்சல பிரதேச ஆளுநராக பா.ஜ.க. மூத்த தலைவர் பண்டாரு தத்தாத்ரேயா நியமிக்கப்பட்டு உள்ளார். இதனால் இமாச்சல பிரதேச ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தானின் ஆளுநராக மாற்றப்பட்டு உள்ளார். மகாராஷ்டிர ஆளுநராக பகத் சிங் கோஷ்பார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டது பற்றி தமிழிசை செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, கடும் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் என பிரதமர் மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவும் நிரூபித்து உள்ளனர். தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!