74 வயதில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி

74 வயதான எர்ராமட்டி மங்கம்மா என்ற வயோதிப பெண் அறுவை சிகிச்சை மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் ஒன்று இந்தியாவின் ஆந்திராவில் குண்டூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நெலபார்த்திபாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எர்ராமட்டி மங்கம்மா (வயது 74) அவரின் கணவர் எர்ராமட்டி ராஜா ராவ் (வயது 80). இந்த தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தைகள் இல்லத காரணத்தால் சமூகத்தில் பெரும் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது. இதனால் எப்படியாவது ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்ற அவர்களின் கனவை நனவாக்க முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றி கண்டுள்ளனர்.

பொதுவாக ஒரு பெண்ணின் கருத்தரித்தல் காலம் அவரின் (45-50 வயதில் ) மெனோபாஸ் காலம் முடிவடைவதுடன் நின்றுவிடும். ஆனால் இயற்கைக்கு சவால்விடும் வகையில் குண்டூரில் உள்ள அஹல்யா வைத்தியசாலையின் உதியுடன் இன் விட்ரோ கருத்தரித்தல் (உதவி இனப்பெருக்க) தொழில் நுட்பத்தின் ஊடாக இந்த பெண்மணி கருதரித்து இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் இதற்கான சிகிச்சைகளை முன்னெடுத்த இந்த தம்பதியினருக்கு இம் மாதம் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் எர்ராமட்டி மங்கம்மா 74 வயதில் குழந்தை பெற்றெடுத்த உலகின் மிக வயதான பெண்மணி என்ற புகழுக்கு சொந்தகார் ஆகின்றார்.

இது குறித்து சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர் கூறியதாவது:-

இந்த பெண்மணிக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் இல்லை மற்றும் மரபணு முறை மிகவும் நல்லதாக இருந்தது. இருதயநோய் வைத்தியர்கள், நுரையீரல் நிபுணர்கள் மற்றும் பிற சிறப்பு வைத்தியர்கள் சம்பந்தப்பட்ட ஒரு முழுமையான பரிசோதனைக்கு பின்னர் நாங்கள் அவர் குழந்தை பெற முடியும் என முடிவு செய்தோம். அவர் மாதவிடாய் நிறுத்த நிலையை அடைந்தார். ஆனால் ஐவிஎஃப் மூலம் ஒரு மாதத்திற்குள் அதனையும் திரும்பப் பெற்றோம், என்று கூறினார்.

இதற்கு முன் பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள தல்ஜீந்தர் கவுர், 2017ஆம் ஆண்டில், தனது 72ஆவது வயதில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!