அதிபர் தேர்தலில் நானே போட்டியிடுவேன் – ரணில் அறிவிப்பு

அடுத்த அதிபர் தேர்தலில் தாமே போட்டியிடுவதற்கு விரும்புவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று அலரி மாளிகையில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பில் சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.

அமைச்சர்கள் கபீர் காசிம், லக்ஸ்மன் கிரியெல்ல, அகில விராஜ் காரியவசம், மலிக் சமரவிக்ரம, ஜோன் அமரதுங்க, காமினி ஜெயவிக்ரம பெரேரா, ரவி கருணாநாயக்க, சரத் பொன்சேகா, தயா கமகே, நவீன் திசநாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, அஜித் பெரேரா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க,” நானே அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன். நான் தான் கட்சியின் தலைவர். எனவே, போட்டியிடுவதற்கான முழு உரிமையும் எனக்கு உள்ளது. செயற்குழுவின் அங்கீகாரத்துக்காக எனது நியமனத்தை சமர்ப்பிப்பேன். யாராவது அதனை எதிர்ப்பதாயின், அங்கு அவ்வாறு செய்யலாம்.” என்று கூறினார்.

இதன்போது,கருத்து வெளியிட்ட சஜித் ஆதரவாளர்களான அமைச்சர்கள் கபீர் காசிம், மலிக் சமரவிக்ரம ஆகியோர், இது கட்சியைப் பிளவுபடுத்தும் என்று கூறினர்.

அதற்கு ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைவராக தான், போட்டியிட முடிவு செய்தால், எல்லோரும் ஆதரிக்க வேண்டும் என்று கூறினார்.

சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் மூத்த தலைவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்தை ஏற்கவில்லை.

எனவே, இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு, ரணில் விக்ரமசிங்கவும், சஜித் பிரேமதாசவும், நாளை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

ரணில் விக்ரமசிங்கவின் இந்த முடிவு ஐதேகவுக்குள் பிளவுகளை அதிகரிக்கச் செய்துள்ளது. சஜித் அணி, ரணில் அணி என இரண்டு தரப்புகளாக பிரிந்து தமது கருத்துக்களை வெளியிட்டு வருவது, ஐதேக ஆதரவாளர்களையும் பங்காளிக் கட்சிகளையும் குழப்பமடையச் செய்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!