லேண்டர் விக்ரம் எந்தவித பாதிப்பும் இன்றி முழுமையாக உள்ளது – இஸ்ரோ!

நிலவின் பரப்பில் விழுந்து கிடக்கும் சந்திரயான்-2 திட்டத்தின் லேண்டர் விக்ரம், உடைந்து விடாமல் முழுமையாக இருப்பதாகவும், அதே நேரத்தில் சாய்ந்து கிடப்பதாகவும் இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்கு முழுவீச்சில் இஸ்ரோ முயற்சி மேற்கொண்டு வருகிறது. சாஃப்ட் லேண்டிங் என்று சொல்லப்படும் பதமான, மென்மையான முறையில் தரையிறங்குவதற்கு பதிலாக, லேண்டர் விக்ரம் கடினமான முறையில் தரையில் விழுந்துவிட்டதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிலவை சுற்றி வந்துகொண்டிருக்கும் ஆர்ப்பிட்டரில் உள்ள கேமராவில் இருந்து எடுக்கப்பட்ட படங்களை சுட்டிக்காட்டி இதை இஸ்ரோ அதிகாரிகள் இதைத் தெரிவித்துள்ளனர்.

நிலவின் தரையில் விழுந்து கிடந்தாலும், ஆய்வூர்தி பிரக்யானுடன் லேண்டர் விக்ரம் உடையாமல் ஒரே அமைப்பாக உள்ளது என்றும், ஆனால் சாய்ந்து கிடப்பதாகவும் இஸ்ரோ அதிகாரிகள் கூறுகின்றனர். லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருவதாகவும், இஸ்ட்ராக் எனப்படும் இஸ்ரோவின் தொழில்நுட்பக் குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விக்ரம் மற்றும் பிரக்யானின் செயல்பாட்டுக் காலம் பூமியில் 14 நாட்களுக்கு சமமாகும். நிலவைப் பொறுத்தவரையில் அது ஒரு பகல் ஆகும். லேண்டர் உள்ள பகுதியில் சூரிய வெளிச்சம் விழும் இந்த காலகட்டத்திற்குள், அதாவது 14 நாட்களுக்குள் லேண்டருடனான தகவல் தொடர்பை மீட்டமைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், லேண்டர் விக்ரமின் பாகங்கள் உள்ளூர செம்மையாக இருந்தால் மட்டுமே தகவல் தொடர்பை மீட்டமைக்க முடியும் என்றும், அதற்கான வாய்ப்புகள் குறைவே என்றும் ஒரு இஸ்ரோ அதிகாரி தெரிவித்துள்ளார். அதேசமயம், தகவல் தொடர்பை மீட்டமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவும், மீண்டும் அதை இயக்க முடிவதற்கான வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது என்றும் மற்றொரு இஸ்ரோ அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இதற்கு சில வரம்புகள் இருக்கின்றன என்பதையும் அந்த இஸ்ரோ அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். புவிவட்டப்பாதையில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பை இழந்தபோது, அதை மீட்டமைத்த அனுபவம் இஸ்ரோவுக்கு உண்டு என்றாலும், நிலவின் தரையில் இருக்கும் லேண்டரை பொறுத்தவரையில் வேறு சில சிக்கல்கள் உள்ளன.

தகவல் தொடர்புக்கான ஆண்டெனா புவியின் தரைநிலையத்தை நோக்கியோ அல்லது நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டரை நோக்கியோ இருக்க வேண்டும் என்றும், இதற்கேற்ப லேண்டரை திருப்புவது மிகவும் கடினம் என்றும் இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதற்கான வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை என்றும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான பேனல்கள் லேண்டரின் வெளிப்பகுதியில் சுற்றிலும் உள்ளன என்றும், லேண்டர் மின்சக்தியை தயாரித்துக் கொள்வதில் சிக்கல் இல்லை என்றும் தெரிவிக்கும் இஸ்ரோ அதிகாரிகள், லேண்டரினுள் பேட்டரிகள் இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!