இந்தியாவில் பதாகை சரிந்து வீழ்ந்து யுவதி பலி

இந்தியாவில் சென்னையில் பதாதை வீழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் 23 வயது இளம்பெண் உயிரிழந்துள்ளார்.

பதாகை வைப்பதற்கு சென்னை மாநகராட்சி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சென்னை குரோம்பேட்டை – பவானி நகர் பகுதியைச் சேர்ந்த பெற்றோருக்கு ஒரே மகளான சுபஸ்ரீ என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் சென்னையில் உள்ள பள்ளிக்கரணை வீதியில் தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளார்.

பள்ளிக்கரணையின் முன்னாள் நகர மன்ற உறுப்பினரான ஜெயகோபால் என்பவரின் மகனின் திருமண வரவேற்பு நிகழ்விற்காக வீதியெங்கும் வைக்கப்பட்டிருந்த பதாகைகளில் ஒன்று சுபஸ்ரீ மீது சரிந்து வீழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.

பதாகை வீழ்ந்ததில் நிலை தடுமாறி கீழே வீழ்ந்த சுபஸ்ரீயின் வாகனத்தின் மீது தண்ணீர் ஏற்றிச்சென்ற லொறி மோதியுள்ளது.

சுபஸ்ரீ லொறியின் சக்கரத்திற்குள் சிக்கி படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடா செல்வதற்காக விண்ணப்பித்திருந்த சுபஸ்ரீ, அதற்கான நேர்காணலை முடித்துவிட்டு வரும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமான பதாகை அடித்த அச்சகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பதாகை வைத்த முன்னாள் நகர மன்ற உறுப்பினரான ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரித்துள்ளதோடு அனுமதியின்றி பதாகை வைத்ததாக ஒரே நாளில் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.