அமெரிக்காவில் பரபரப்பு: வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு!

அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அப்பாவி மக்களின் உயிரை பறித்து வருகின்றன. எனவே துப்பாக்கி விற்பனை மற்றும் பயன்பாட்டில் கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளை மாளிகையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கொலம்பியா ஹைட்ஸ் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் அனைவரும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினார். எனினும் அவர் தன் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல் சுட்டுத்தள்ளினார். தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தனர். அவர்களை போலீசார் மீட்டு ஆம்புலன்சில் மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மற்ற 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? தாக்குதலின் பின்னணி என்ன? என்பது தெரியவில்லை. தப்பி ஓடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் வாஷிங்டன் நகரில் பெரும் பரபரப்பு நிலவியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!