5 மாவட்டங்களில் அடைமழை- 50 ஆயிரம் பேர் பாதிப்பு

ஐந்து மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் பெய்த அடை மழையினால் 11 ஆயிரத்து 387 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 91 பேர் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று மாலை தெரிவித்தது.

கடும் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக காலி, மாத்தறை,களுத்துறை, கம்பஹா, கொழும்பு ஆகிய மாவட்டங்களே நேற்றைய தினம் கடுமையான பாதிப்புக்குள்ளாகியதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டது. பாடசாலைகளிலும் அலுவலகங்களிலும் வரவு பெரிதும் குறைவடைந்து காணப்பட்டது.

வீதிகளில் நீர் நிரம்பிக் காணப்பட்டதால், பாரிய வாகன போக்குவரத்து நெரிசலுக்கும் முகம் கொடுக்க நேரிட்டது.

நாட்டில் கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் ஆகக்கூடிய மழைவீழ்ச்சி கட்டுநாயக்க பிரதேசத்திலேயே பதிவாகியிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டது.

மேற்படி மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களாக ஏற்பட்டுள்ள மண்சரிவு, வெள்ள அனர்த்தங்களால் நேற்று மாலை வரை ஒரு பெண் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயங்களுக்குள்ளாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளரும் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

அனர்த்தங்களால் 22 வீடுகள் முழுமையாகவும் 282 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருப்பதனால் 878 குடும்பங்களைச் சேர்ந்த 3ஆயிரத்து 488 பேர் 16 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இன்றும் அதனைத் தொடர்ந்து வரும் சில நாட்களுக்கும் மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சுமார் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. கடலில் மழை பெய்யும் அதேநேரம் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் கடலுக்குச் செல்லும் மீனவர்களும் கடற்படையினரும் எச்சரிக்ைகயாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!