கோத்தா போட்டியிட தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றில் விரைவில் மனு

வரும் நொவம்பர் 16ஆம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி விரைவில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொலன்னாவவில் நேற்று நடந்த ஐதேக கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனை கூறினார்.

“ சட்டவாளர்களும், சிவில் பிரதிநிதிகள் சிலரும் இந்த மனுவை விரைவில் தாக்கல் செய்யவுள்ளனர்.

கோத்தாபய ராஜபக்ச சட்டரீதியான கடவுச்சீட்டையோ, செல்லுபடியான அடையாள அட்டையையோ கொண்டிருக்கவில்லை என்பதால், அவர் முறைப்படியாக சிறிலங்காவின் குடிமகன் அல்ல என்ற வாதத்தின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

கோத்தாபய ராஜபக்சவிடம் சட்டரீதியான கடவுச்சீட்டோ, செல்லுபடியான அடையாள அட்டையோ இல்லை. அவரது இரட்டைக் குடியுரிமை தொடர்பான ஆவணங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

கோத்தாபய ராஜபக்ச இரண்டு தேசிய அடையாள அட்டைகளை வைத்திருக்கிறார். இதிலிருந்து அவரது ஆவணங்கள் மோசடியாகப் பெறப்பட்டவை என்பது உறுதியாகிறது.

இதன் அடிப்படையில் அவரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை செய்ய உத்தரவிடக் கோரி மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது.” என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!