‘தேர்தல் குண்டு’ போட்ட கம்லத்தின் பதவி பறிப்பு?

நீதியமைச்சில், சாட்சியங்களைப் பாதுகாக்கும் அதிகார சபையின் தலைவரான முன்னாள் பிரதி சொலிசிடர் ஜெனரல் சுஹத கம்லத் இன்று பதவிநீக்கம் செய்யப்படுவார் என நீதியமைச்சர் தலதா அத்துகோராள அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவும் – ராஜித சேனாரத்னவும் தனக்கு கடும் அழுத்தம் கொடுத்ததாக ஸ்ரீலங்காவின் சாட்சிகளை பாதுகாப்பதற்கான அதிகார சபையின் தலைவரான முன்னாள் பிரதி சொலிசிடர் ஜெனரல் சுஹத கம்லத், ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துவரும் நிலையில் அவரது இந்த நேர்காணல் தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்நிலையில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுஹத கம்லத்தினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதியமைச்சர் தலதா அத்துகோராளவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் இன்று அல்லது நாளை அவரை பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

“சுஹத கம்லத் என்கிற நபரது தனிப்பட்ட அரசியல் நோக்கம் பற்றி எனக்குப் பிரச்சினை கிடையாது. எனினும் அவர் நீதியமைச்சில் உள்ள சந்தேகநபர்கள் மற்றும் சாட்சியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான அதிகார சபையின் தலைவராக கடமையாற்றுகின்றார். அவரை அந்தப்பதவிக்கு முன்னாள் நீதியமைச்சரான விஜேதாஸ ராஜபக்ச வழங்கியிருப்பதோடு அந்தப் பதவியிலேயே தொடர்ந்தும் இருந்தும் வருகின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அரச அதிகாரி ஒருவர் விசேடமாக அரச நிர்வாகத்தில் இருப்பவர் சாட்சிகளை பாதுகாப்பதற்கான அதிகார சபைத் தலைவருக்கு தனது அரசியல் நோக்கம் என்னவாக இருந்தாலும் அதனை ஊடகங்கள் முன்பாக வெளியிட முடியாது. இதுகுறித்து நான் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் முன்வைத்தேன். அவர் பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதி செயலாளருக்கு தெரியப்படுத்தியிருக்கின்றார். இன்று அல்லது நாளை அவர் பதவிவிலகாவிட்டால் ஜனாதிபதி செயலாளரினால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!