பல வருடங்களிற்கு முன்னர் பெண்களை தொடர்கொலை செய்தது நானே- தென்கொரிய பொலிஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வாக்குமூலம்

தென்கொரிய காவல்துறையினரை பல வருடங்களாக நெருக்கடிக்குள்ளாக்கிய படுகொலைகளை தானே செய்ததாக பல வருடங்களிற்கு பிறகு நபர் ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

லீ சுன் ஜே என்பவரே தனது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.ஏற்கனவே தனது உறவினர் ஒருவரை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையிலேயே அவர் தனது குற்றங்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.

1986 முதல் 91 வரை தென்கொரியாவின் சியோலில் இடம்பெற்ற தொடர்கொலைகளையே தானே செய்ததாக நபர் ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ள காவல்துறையினர் 14 கொலைகளை தானே செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட நபர் 30 பாலியல் வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தான் செய்த கொலைகள் குறித்த முழுமையான விபரங்களை வெளியிட்டுள்ளதுடன் கொலைகள் இடம்பெற்ற இடங்களின் படங்களை வரைந்து காண்பித்துள்ளார்,அவர் தெரிவித்துள்ள விடயங்கள் உண்மையானவையா என காவல்துறையினர் விசாரணை செய்வார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல தசாப்தங்களாக தென்கொரிய காவல்துறையினரை திணறச்செய்துகொண்டிருந்த கொலைகள் குறித்த விசாரணைகளிலேயே இந்த திருப்பு முனை ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒன்பது பெண்களும் பாலியல் ரீதியில் தாக்கப்பட்ட பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தனர்,அவர்களது உடைகளை பயன்படுத்தியே கழுத்து நெரிக்கப்பட்டிருந்ததும் கொல்லப்பட்டவர்களில் பதின்ம வயது யுவதிகள் முதல் 70 வயதானவர்கள் வரை உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!