கோத்தாவுக்கு தடை வந்தால் சமல் வேட்பாளர்!

கோத்தாபய ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரிக்கப்படும் வழக்கில் அவருக்கு பாதகமான தீர்ப்பு கிடைக்குமானால் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவினை பெயர் குறிப்பிட்டு வேட்புமனுத்தாக்கல் பத்திரங்களை சமர்ப்பிக்க கட்சி ரீதியில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என வாசு தேவ நாணயக்கார தெரிவித்தார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமைகள் காணப்படுகின்றதா, என்றும் போட்டியிடும் பட்சத்தில் ஏற்படும் சட்ட சிக்கல் குறித்தும் பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சட்ட நிபுணர்பகளிடம் ஆலோசனையினை பெற்றே அவரை ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

இரட்டை பிரஜாவுரிமையினை உடையவர் ஒரு நாட்டின் ஜனாதிபதியானால் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பது ஏற்றுக் கொள்ள வேண்டும். அரசியலமைப்பின் 19வது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை உடையவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியாது என்பது வரவேற்கத்தக்கது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையினை இரத்து செய்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்தே அவர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். ஆனால் தற்போது இலங்கை குடியுரிமையினை தொடர்புப்படுத்திய சட்ட சிக்கல் நிலையே ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜக்ஷ இலங்கை பிரஜையாக ஏற்றுக் கொள்வதை தடுத்து உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்தானை சிவில் செயற்பாட்டாளர்களினால் தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுத்தாக்கல் மூவர் அடங்கிய நீதிபதிகளினால் தற்போது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளபடுகின்றது.

தாக்கல் செய்யப்பட்ட மனுத்தாக்கலுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பினை ஏற்றுக் கொள்ளவே வேண்டும். ஒருவேளை பாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுமாயின் பொதுஜன பெரமுனவினர் மாற்று நடடிக்கையினை மேற்கொள்வது சாதாரண விடயமாகும். இதனடிப்படையில் இம்மாதம் 7ம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!