பொதுமக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளை கோத்தாபய நிறைவேற்றுவார் : மஹிந்தானந்த

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படாவிட்டால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என்று கூறியவர்கள் இன்று சஜித் பிரேமதாஸவுடன் கைகோர்த்துக்கொண்டு நிற்கின்றார்கள்.

ஆனால் எம்முடைய ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, தான் வழங்குகின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய ஒருவராவார்.

இம்முறை மலையக மக்களின் நலன் சார்ந்து அமுல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் கோத்தாபய ராஜபக்ஷவிடம் இருக்கின்றது.

அவர் அத்திட்டங்களை நிச்சயமாக நடைமுறைப்படுத்துவார் என்பதற்கான உத்தரவாதத்தை நான் வழங்குகின்றேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

மலையக இளைஞரணியினால் இன்று சனிக்கிழமை பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் எட்ஜில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மலையக இளைஞர் கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

இன்றளவில் மலையக பெருந்தோட்ட மக்களின் உண்மையான பிரச்சினைகள் என்னவென்பது எமக்குத் தெரியும். குறிப்பாக மலையக மக்களுக்கான வீடமைப்புத்திட்டம் என்பது முறையாக நடைமுறைப்படுத்தப்படாத ஒன்றாகவே காணப்படுகின்றது.

வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட வீடுகளும் கோழிக்கூடு போன்றே இருக்கின்றன. அத்தோடு அந்த இல்லங்களுக்கான நீர், மின்சாரம், சீரான வீதி உள்ளிட்ட எவ்தவொரு உட்கட்டமைப்பு வசதிகளும் முறையாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

அதேபோன்று மலையக சமுதாயத்திற்கு இன்னமும் முறையான கல்வி வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. பெருந்தோட்ட இளைஞர், யுவதிகள் பலரும் க.பொ.த சாதாரணதரம் வரை படித்துவிட்டு கொழும்பில் வந்து தொழில்புரிகின்றனர். அவர்களுக்கான சீரான வேலைவாய்ப்பென்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.

மேலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வுகோரி போராட்டங்கள் இடம்பெற்றன. ஆனால் அவர்களுடைய கோரிக்கைகள் இதுவரையிலும் பூர்த்தி செய்யப்படவில்லை. சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படாவிட்டால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என்று கூறியவர்கள் இன்று சஜித் பிரேமதாஸவுடன் கைகோர்த்துக்கொண்டு நிற்கின்றார்கள்.

ஆனால் எம்முடைய ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, தான் கூறுகின்றவற்றைச் செய்யக்கூடியவர் என அவர் இதன்போது தெரிவித்தார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!