சிவாஜிக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை!

ஐனாதிபதி தேர்தலில் எம்.கே. சிவாஜிலிங்கம் போட்டியிடுவதற்கும் எமது கட்சிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் அவ்வாறு தேர்தலில் போட்டியிடும் முடிவை கட்சி எடுக்கவும் இல்லை என்றும் அவரது முடிவிற்கும் எங்கள் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசியக் கட்சிகளை இணைத்து ஐனாதிபதித் தேர்தலில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கும் இரண்டாம் சுற்றுச் சந்திப்பு நேற்று இநடைபெற்றது. இச்சந்திப்பின் முடிவில் ஊடகவியியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலையே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“கட்சிக்கும் அவருக்கும் சம்மந்தமில்லை. அவர் கட்சியில் எந்தவொரு முடிவையும் கேட்காமலே தான் போட்டியிடுகின்றார். நிச்சயமாக கட்சி கூடி அவருக்கு எதிரான நடவடிக்கையை நாங்கள் எடுக்க இருக்கின்றோம். எமது கட்சிக்கும் சிவாஜிலிங்கம் எடுத்த முடிவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

பொது வேட்பாளர் என்ற ரீதியில் அவரும் பரிசீலிக்கப்படுவாரா என்பது தொடர்பாக எந்தவிதமான முடிவும் இதுவரையில் எடுக்கவில்லை. எங்களைப் பொறுத்தமட்டில் சிவாஜிலிங்கம் எங்கள் கட்சியினுடைய வேட்பாளர் அல்ல. கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளராக கருத முடியாது” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!