2015 மனித உரிமை பேரவை தீர்மானம் மூலம் சர்வதேச சமூகத்தின் நேரடி தலையீட்டை தடுத்து நிறுத்தினோம்- கோத்தாவிற்கு மங்கள பதிலடி

2015 இல்ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்தை நியாயப்படுத்தி நிதியமைச்சர் மங்கள சமரவீர கருத்து வெளியிட்டுள்ளார்.

பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தான் ஜனாதிபதியானால் ஐநா தீர்மானத்தை ஏற்கமாட்டேன் என தெரிவித்துள்ள நிலையிலேயே நிதியமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

2014 டிசம்பர் மாதமளவில் இலங்கை சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டது என தெரிவித்துள்ள மங்களசமரவீர இலங்கை படையினர் ஐநா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை இழந்திருந்தனர் வர்த்தக வாய்ப்புகளும் குறைவடைந்த நிலையில் காணப்பட்டன என தெரிவித்துள்ளார்.

தற்பெருமைக்காக முன்னெடுக்ப்பட்ட பல திட்டங்களிற்காக பெறப்பட்ட கடன்கள் காரணமாக பொருளாதாரம் பெரும் நெருக்கடியை அவ்வேளை சந்தித்தது எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

2015 ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலின் பின்னர் , 100 நாள் திட்டத்திற்காக மக்களிடம் பெறப்பட்ட ஆணையின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் தனது சொந்த யோசனைகளை சமர்ப்பித்ததுடன் ஐநா தீர்மானத்திற்கு இணை அணுசரனை வழங்கியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இலங்கை அரசாங்கம் தனது சொந்த பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கான இறமையுடன் கூடிய உரிமையை வலியுறுத்தியது இதன் காரணமாக சர்வதேச சமூகம் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சூழலை தடுத்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது இலங்கையில் உறுதியான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான திட்டம், தனது சொந்த மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கான பொறுப்பை ஏற்கும் நாடு என்ற இலங்கையின் கௌரவத்தை சர்வதேச அளவில் உறுதிப்படுத்துவதற்கான திட்டம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் எமது அரசாங்கத்தின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை பயன்படுத்தி சர்வதேச நடவடிக்கைகளை எடுப்பதை தடுத்து நிறுத்தினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொறுப்புள்ள இறமையுள்ள நாடு என்ற அடிப்படையில் நாங்கள் செயற்பட தவறினால் ,ஏனையவர்கள் உள்நுழைவதற்கான சூழலை ஏற்படுத்துவதன் மூலமும் எங்கள் மக்களிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றோம் என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நியாயதிக்கத்தையும் நாங்கள் கருத்தில்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!