டிரம்ப் அனுப்பிய கடிதத்தை குப்பைத் தொட்டியில் வீசிய துருக்கி அதிபர் எர்டோகன்?

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்த பிறகு அங்குள்ள குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் குர்து போராளிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் பலியாகினர். துருக்கியின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. போர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில், துருக்கியின் பொருளாதாரம் முற்றிலும் அழிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்தார். ஆனால் எதற்கும் அஞ்சப்போவதில்லை என்றும், சிரியாவில் குர்து போராளிகள் மீதான போர் நடவடிக்கைகளை நிறுத்தப்போவதில்லை என்றும் துருக்கி அரசு தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், துருக்கி பிரதமர் எர்டோகனுக்கு கடந்த 9ம் தேதி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை நேற்று வெள்ளை மாளிகை வெளியிட்டது. ஆனால் டிரம்ப் எழுதிய கடிதம் குப்பைத் தொட்டியில் எறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிரம்ப் எழுதிய கடிதத்தில், “பிரச்சினைக்குரிய ஆளாக இருக்க வேண்டாம், முட்டாள்த்தனமாகவும் செயல்பட வேண்டாம், ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்வோம். ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு நீங்கள் பொறுப்பாக வேண்டாம், துருக்கிய பொருளாதாரம் அழிக்கப்படுவதற்கு நானும் பொறுப்பாக விரும்பவில்லை.

நீங்கள் இந்த விவகாரத்தில் நேர்மையாகவும், மனிதாபிமானத்துடன் செயல்பட்டால் வரலாறு உங்களை சிறந்தவராக பார்க்கும். தீமையை செய்தால் அது உங்களை எப்போதும் கொடுங்கோலனாக பார்க்கும்.” என எழுதப்பட்டிருந்தது. இந்த கடிதத்தை அதிபர் எர்டோகன் முழுமையாக நிராகரித்து குப்பைத் தொட்டியில் எறிந்ததாக துருக்கி அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!