23 ஆம் திகதி முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன்!

தனக்கு இதுவரைக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், தமக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும், ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.

எனக்கு இதுவரைக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலம் தெரிவித்திருந்தும் எது விதமான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. தொடர்ந்து அச்சுறுத்தல் இடம்பெற்று வருகின்றது. போட்டியிடும் 35 வேட்பாளர்களுக்கும் பாராபட்சமின்றி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். கட்டுப்பணம் செலுத்திய நேரமுதல் தமக்கு கைத் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து கைத்தொலைபேசியினை சிறிது நாட்கள் நிறுத்தி வைத்திருந்தேன்.

சிங்கள பௌத்த தேசம் சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு பாதுகாப்பு வழங்குமே தவிர சிறுபான்மையினருக்கு வழங்காது. எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று வேட்பாளர்களுக்கான சந்திப்பொன்று தேர்தல் ஆணைக்குழு தவிசாளரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அச்சந்திப்பில் குறித்த விடயம் தொடர்பாக தெளிபடுத்தவுள்ளேன்.

அடுத்த கட்டமாக 23 ஆம் திகதி எனது எதிர்கால அரசியல் நகர்வு தொடர்பாக என்ன செய்யப் போகின்றேன் என்பதனை கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளேன் என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!