சுற்றுலா சென்ற பெண்ணின் வாழ்க்கையை மாற்றிய புகைப்படம்!

ங்கிலாந்து நாட்டின் ஸ்லாக் பகுதியை சேர்ந்த பெண்மணி பெல்கில் (41). இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த மே மாதம் ஸ்காட்லாந்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். அந்நாட்டின் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்த பெல்கில் இறுதியாக எடின்பர்க் நகரில் உள்ள சுற்றுலாதலமான ‘கேமரா அப்ஸ்கரா அண்ட் வெல்ட் ஆப் இல்யூஷன்’ என்ற அருங்காட்சியகத்திற்கு சென்றார். அந்த அருங்காட்சியகத்தில் உள்ள இடங்களை கண்டுகளித்த பெல்கில் இறுதியாக அங்கு வைக்கப்பட்டிருந்த தெர்மல் கேமராவில் தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது தனது குடும்பத்தினரின் தெர்மல் புகைப்படத்திற்கும் தனது புகைப்படத்திற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை அவர் கண்டுபிடித்தார். தெர்மல் கேமராவில் தனது மார்பக பகுதியை சுற்றிலும் மிகப்பெரிய அளவில் சிவப்பு நிறத்தில் வெப்ப அளவு படர்ந்திருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் இணையத்தின் மூலம் சில தகவல்களை பெற்று பின்னர் இது குறித்து மேலும் தகவல்களை பெற மருத்துவமனைக்கு சென்று தனது உடலை எக்ஸ்ரே உள்பட அனைத்து பரிசோதனைகளையும் செய்தார்.

அப்போது அந்த மருத்துவ முடிவுகள் அவருக்கு அதிர்ச்சியை அளித்தது. ஏனென்றால் மருத்துவ பரிசோதனையின் முடிவில் அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மார்பகபுற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் அதற்கான சிகிச்சையை உடனடியாக தொடங்கவேண்டுமென பெல்கில்லுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். இதையடுத்து உடனடியாக மார்பகபுற்றுநோய்க்கான சிகிச்சையை மேற்கொண்ட பெல்கில் இதுவரை இரண்டு அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார். மேலும் மார்பக புற்றுநோய் பரவாமல் தடுக்க இறுதியாக மூன்றாவது சிகிச்சையை மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில், ‘கேமரா அப்ஸ்கரா அண்ட் வெல்ட் ஆப் இல்யூஷன்’ அருங்காட்சியகத்திற்கு சுற்றுலா வந்து தெர்மல் கேமராவில் புகைப்படம் எடுத்தபோதுதான் தனது உடலில் ஏதோ பிரச்சனை இருப்பதை கண்டுபிடித்தாகவும், அது மார்பக புற்றுநோய் என்பதை கண்டறிய உங்கள் அருங்காட்சியகம் மிகவும் உதவி புரிந்ததாக அருங்காட்சியக நிர்வாகத்திற்கு நன்றி கூறி பெல்கில் செய்தி அனுப்பியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!