அரச புலனாய்வு சேவை தலைவரே முக்கிய பொறுப்பு – தெரிவுக்குழு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுப்பதற்குத் தவறியதில், அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் நிலந்த ஜெயவர்த்தனவுக்கு பெரும் பங்கு இருப்பதாகவும், ஏனைய புலனாய்வுப் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு செயலர், காவல்துறை மாஅதிபர், ஆகியோர் தமது பொறுப்புக்களில் தவறியுள்ளதாகவும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரித்த தெரிவுக்குழுவின் 240 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை, அதன் உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

சிறிலங்கா அதிபர், பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், சட்ட மாஅதிபர் போன்றோரும் தமது கடமைகளை தவறியுள்ளதாகவும், இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,

தேசிய புலனாய்வு தலைவர் மற்றும் இராணுவப் புலனவய்வுப் பணியகமும், தமது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாதிருக்க பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேம்படுத்தப்பட்ட நிதி மேற்பார்வைப் பொறிமுறை ஒன்றை நிறுவ வேண்டும்,

அரசியல்வாதிகள், பொறுப்புக் கூறக்கூடியவர்களாக இருக்க வேண்டும்,

வளர்ந்து வரும் பயங்கரவாத சூழ்நிலையில் கல்வித்துறையை மீளமைக்க வேண்டும்,

நீதி வழங்குவதில் காணப்படும் தாமதத்தை நீக்க வேண்டும்.

சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைக்க வேண்டும்.

ஊடக அறிக்கையிடல், போலி செய்திகள் குறித்தும் வஹாபிசம் குறித்தும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்பன போன்ற பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!