குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் – மஹிந்த சமரசிங்க

பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கை பிரகடனம் கோத்தபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி பிரமானம் செய்யும் தினத்தில் இருந்து செயற்படுத்தப்படும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பின் மஹிந்த சமரசிங்க, குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இணைந்த கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இராஜகிரியவில் உள்ள எதிரணியின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

ஏப்ரல் 21 தின குண்டுத்தாக்குதல் தேசிய பாதுகாப்பின் பலவீனத்தன்மையினை வெளிப்படுத்தியுள்ளது. பாராளுமன்ற தெரிவு குழுவின் அறிக்கை எவ்விதமான புதிய உண்மைகளையும் பகிரங்கப்படுத்தவில்லை. மாறாக குற்றவாளிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மிக சூட்சமமான முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள்.

தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு பலமான தலைமைத்துவத்தினை தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்தோம். இவரை தவிர்த்து பாதுகாப்பு துறையில் தேர்ச்சி பெற்றவர் எவரும் கிடையாது. எமது ஆட்சியில் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் குறித்த மர்மங்கள் பகிரங்கப்படுத்தப்படும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!