கோத்தாவின் பரப்புரைக்கு 750 மில்லியன் செலவு – சஜித் 470 மில்லியன்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஐந்து வேட்பாளர்கள், இதுவரை 1257 மில்லியன் ரூபாவை பரப்புரைகளுக்காக செலவிட்டுள்ளனர் என்று,தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.

ஒக்ரோபர் 14ஆம் நாளுக்கும், நொவம்பர் 4ஆம் நாளுக்கும் இடைப்பட்ட காலத்திலேயே ஐந்து வேட்பாளர்கள் இந்த தொகையை செலவிட்டுள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்காக, 750 மில்லியன் ரூபாவும், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பரப்புரைகளுக்காக 470 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளன.

பொதுஜன பெரமுன அச்சு ஊடகங்களுக்காக 53 மில்லியன் ரூபாவையும், இலத்திரனியல் ஊடகங்களுக்காக 603 மில்லியன் ரூபாவையும், ஏனையவற்றுக்காக 94 மில்லியன் ரூபாவையும் செலவிட்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி, 104 மில்லியன் ரூபாவை அச்சு ஊடகங்களுக்காகவும், 253 மில்லியன் ரூபாவை இலத்திரனியல் ஊடகங்களுக்காகவும், 113 மில்லியன் ரூபாவை ஏனையவற்றுக்காகவும் செலவு செய்துள்ளது.

அனுரகுமார திசநாயக்கவை வேட்பாளராக நிறுத்தியுள்ள தேசிய மக்கள் சக்தி, 31 மில்லியன் ரூபாவையும், பத்தரமுல்ல சீலாரத்தன தேரரை வேட்பாளராக நிறுத்தியுள்ள ஜனசெத பெரமுன 4 மில்லியன் ரூபாவையும், மகேஸ் சேனநாயக்கவை வேட்பாளராக நிறுத்தியிருக்கும், தேசிய மக்கள் இயக்கம் 2 மில்லியன் ரூபாவையும் தேர்தல் பரப்புரைக்காக செலவிட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!