ஆட்சியிலிருந்த இரு அரசாங்கங்களுமே இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தன: மஹேஷ் சேனாநாயக்கா

சுதந்திரத்தின் பின்னர் 71 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த பிரதான கட்சிகள் இரண்டும் இளைஞர்களை ஆயுததாரிகளாகவே உருவாக்கியுள்ளன என்று தெரிவித்த தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் இராணுவ தளபதியுமான ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கா சிறந்த ஆளுமையுள்ள நடுநிலையான தலைவரொருவராலேயே நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்றும் கூறினார்.

பொரள்ளையில் அமைந்துள்ள தேசிய மக்கள் இயக்கத்தின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, நாட்டை இவ்வளவு காலமும் ஆட்சி செய்த பிரதான கட்சிகள் இரண்டும் தமது அரசியல் இலாபத்திற்காகவே இளைஞர்களை பயன்படுத்தியுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் மற்றும் ஏப்ரல் தாக்குதல்களுக்கும் நாட்டின் ஆட்சியாளர்களே பிரதான காரணமாக இருக்கின்றனர்.

எமது எண்ணம் இளைஞர்களின் கணவை நிறைவேற்றுவதே எதிர்வரும் காலங்களில் இளம் தலைமுறையினரே நாட்டை ஆளவேண்டும். அவர்களுக்கான எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொடுத்தாலே நாட்டின் எதிர்காலம் சுபீட்சமாக அமையும். நாட்டின் இளம் தலைமுறையினர் அவர்களின் கைகளில் ஆயுதம் ஏந்துவதை நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் அதற்கு பதிலாக உபகரணங்களை ஏந்த வேண்டும். பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த பங்களிப்பு வழங்கவேண்டும். அவ்வாறு சிறந்த ஒரு இளம் தலைமுறையினரை உருவாக்குவதே எமது நோக்கமாகும் என்றார்.

அத்தோடு, தற்போது அரசியல் மேடைகளிலே கூட்டணிகளாக கைகோர்த்துள்ளோர்கள் மத்தியிலே அதிக பிரிவினைகள் காணப்படுகின்றது . இந்த கூட்டணிகளுக்குள் இனவாத , மதவாத கட்சிகள் பல அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் தான் மக்கள் மத்தியில் பிரிவினைகளை தோற்றுவிக்கும் வகையில் செயற்படுபவர்கள்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக மக்களின் பணத்தை செலவிடும் அரசியல்வாதிகள், வாக்குகளை பெறுவதற்காக மக்களை ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். தேசிய பாதுகாப்பு தொடர்பில் அக்கறை செலுத்துவது போல் காண்பித்து மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வாக்குகளை கைப்பற்றும் சூழ்ச்சிகளிலும் தற்போது ஈடுப்பட்டு வருகின்றனர் என்றார்.

கேள்வி: பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் இருவரும் இலவசமாக பல பொருட்களை வழங்குவதாக தெரிவிக்கின்றனர் இது சாத்தியமாகுமா?

பதில்: இவர்கள் இருவரும் மக்களை ஏமாற்றவே இவ்வாறு தெரிவிக்கின்றனர். இது சாத்தியப்படாத வாக்குறிதிகளாகும். நாட்டின் கடன் தொகையே பாரியளவில் காணப்படும் போது எவ்வாறு மக்களுக்கு இலவசமாக இவ்வளவு சலுகைகளை பெற்றுக் கொடுப்பார்கள் இவை அனைத்தும் வாக்குகளை பெறுவதற்கான சூழ்ச்சிகளாகும்.

கேள்வி: தேசிய பாதுகாப்பு தொடர்பில் உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில்: தேசிய பாதுகப்பு என்பது ஒரு விரிவான பரப்பு. அதனை உடனே உறுதிப்படுத்த முடியாது. முதலில் நாட்டின் தலைவர் பக்கச்சார்பற்ற நடுநிலை வகிப்பவராக விளங்கவேண்டும். நாட்டின் அனைத்து மக்களையும் பிரிவினை இன்றி சமமாக பார்ப்பவராக இருக்க வேண்டும். இதனை நடுநிலையான சிறந்த ஆளுமைமிக்க தலைவர் ஒருவராலேயே நிறைவேற்ற முடியும்.

கேள்வி : நாட்டில் யுத்தம் இல்லாத போதும் இராணுவத்தினர் ஏன் அதிகமாக இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். உண்மையாகவே நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உண்டா?

பதில்: நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே இராணுவர்கள் அதிகமாக இணைத்துக் கொள்ளப்படவில்லை. இராணுவத்தினர் 22 வருடங்களே பணிபுரிய முடியம். இன்று 5000 பேர் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டால் 22 வருடங்களின் பின்னர் அவர்கள் அனைவரும் ஒரே தடவையில் ஓய்வு பெருவர் . அதனை நிவர்த்தி செய்து கொள்வதற்காகவும், நாட்டின் அபிவிருத்தி செயற்திட்டங்களில் அவர்களை ஈடுப்படுத்துவதற்காகவுமே இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!