சி.ஐ.டி.யின் சிறப்பு விசாரணை அதிகாரி நிஷாந்த டிசில்வா தப்பியோடியமைக்கான காரணம் இதுதான் – விமல்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிரான தூண்டுதல்கள் மற்றும் இராணுவத்தினர் சிறையிலடைக்கப்பட்டமைக்கு குற்றப்புலனாய்வு பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரி நிஷாந்த டி சில்வா பிரதானமானவராவார். இதனாலேயே அவர் வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார் என்று சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அமைச்சில் இன்று உத்தியோகபூர்வமாக கடமையேற்றுக் கொண்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பெரும்பாலான மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். பெரும்பாலான சிங்கள மக்களும் சிறியளவு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் எமக்கு வாக்களித்திருக்கின்றனர். அந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு நாம் முழுமையாக பாடுபடுவோம். கடந்த நான்கரை வருடங்களைப் போன்றல்லாது புதிய பாதையில் செல்ல அனைவரும் ஒன்றிணைவோம்.

அத்தோடு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு வாக்குறுதியளித்திருக்கிறார். அந்த பொறுப்பையும் நிறைவேற்றுவோம் என்றும் அவர் இதன்போது கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!