‘என் வேகமே என்னை கொல்லும்’ – வாசகம் உண்மையான பரிதாபம்!

உயிர் விலை மதிக்க முடியாதது என்பதை பலரும் உணருவதில்லை. அதுவும் வாழ்க்கை எவ்வளவு முக்கியம் என்பதை உணராத பலர் தற்போதைய காலகட்டத்தில் ஏதேதோ சாகசங்களில் ஈடுபட்டு உயிரை வீணே இழகின்றனர். அதிலும் அதி நவீன இருசக்கர வாகனங்களை வைத்திருக்கும் இளசுகள் போடும் ஆட்டத்திற்கு குறைவில்லை. லட்சக்கணக்கில் பணம் செலவழித்து 200 சிசி-க்கும் அதிகமான மோட்டார் திறனுடைய டூ வீலர்களை வாங்கி ரோட்டில் பறக்கிறார்கள். இந்நிலையில் இந்த வேகம் ஒருநாள் என்னைக் கொல்லக்கூடும், யாரும் அழ வேண்டாம்” என்ற வாசகம் எழுதப்பட்ட பல்சர் வாகனம் பனை மரத்தின் மீது மோதிய விபத்தில் அதனை ஒட்டி வந்த டிப்ளமோ மாணவர் உயிரிழந்தார்.

புதுக்குப்பத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்ற அந்த மாணவர் தனது பல்சர் 220 வாகனத்தில் நண்பன் ஏகேஷை அழைத்துக்கொண்டு காலை கடலூர் நோக்கிச் சென்றுள்ளார். தலைக்கவசம் அணியாமல் அதிவேகத்தில் சென்றதாகக் கூறப்படும் நிலையில் சின்னாண்டிக்குழி சாலை அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பனை மரத்தின் மீது மோதியுள்ளது.

இதில் ஆகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஏகேஷ் காயங்களுடன் தப்பினார். விபத்துக்குள்ளான பல்சர் வாகனத்தின் பின்னால் “இந்த வேகம் ஒருநாள் என்னைக் கொல்லக்கூடும், யாரும் அழ வேண்டாம்” என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. மித வேகம் மிக நன்று போன்ற எவ்வளவோ நல்ல வாசகங்கள் இருக்கையில், உயிரின் மதிப்பு தெரியாமல் வேகத்தால் ஏற்படும் மரணத்தை பெருமையாக எழுதி திரிந்த ஆகாஷ் போன்ற இளைஞர்கள் எப்போது தான் உணருவார்கள் வாழ்வின் அருமையை..

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!