ஆசிரியரின் கொடுமை தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவன்!

உசிலம்பட்டியில், தன்னிடம் டியூசன் படிக்க வராததால் ஆத்திரம் அடைந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் கொடுத்த டார்ச்சரால், 10 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த சிங்கம்- அமுதா தம்பதியினரின் மகன் பாலாஜி. உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இவர் 10ம் வகுப்பு படித்து வந்தார். கணித ஆசிரியர் ரவி, தனியாக டியூசன் சென்டர் வைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மாணவன் பாலாஜி கடந்த வருடம் 9ம் வகுப்பு படித்த போது ரவியின் டியூசன் சென்டரில் படித்துள்ளார். பின்னர் 10ம் வகுப்புக்கு வந்தவுடன் அவருடைய டியூசன் சென்டருக்கு செல்லாமல், வேறொரு டியூசன் சென்டருக்கு சென்று படித்துள்ளார்.

இதனால் மாணவன் பாலாஜி மீது ஆசிரியர் ரவி கடும் கோபத்தில் இருந்ததாகவும், மாணவனை அடிக்கடி ஏதேனும் காரணத்தைக் கூறி அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வீட்டில் தெரிவித்தபோது, அவரை சமாதானப்படுத்தி பெற்றோர் பள்ளிக்கு அனுப்பிவைத்துள்ளனர். கடந்த 6 மாதங்களாகவே பள்ளியில் இப்பிரச்சனை தொடர்ந்துள்ளது. இந்நிலையில் மாணவன் பாலாஜி சனிக்கிழமை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளான். கணித பாடவேளையில் ஆசிரியர் ரவி வகுப்பறைக்கு வந்ததும் பாலாஜியை கோபத்துடன் திட்டியதாக கூறப்படுகிறது.

ஆசிரியர் கடுமையாகப் பேசியதால் மனமுடைந்த பாலாஜி சனிக்கிழமை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு சென்று யாரிடமும் பேசாமல் இருந்தாக கூறப்படுகிறது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் தோட்டத்திற்கு சென்ற நிலையில், தனியாக இருந்த மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலாஜியின் சடலத்தை மீட்டு பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த உசிலம்பட்டி தாலுகா போலீசார் பாலாஜி எழுதிவைத்த கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்

அந்த கடிதத்தில், “தன்னுடைய சாவுக்கு ஆசிரியர் ரவிதான் காரணமென்றும் அவன் கொடுமை தாங்காமல் இம்முடிவை எடுத்ததாகவும், அவனுக்கு தண்டனை வாங்கித்தர வேண்டுமென்றும், அனைவருக்கும் இறுதி வணக்கம்” எனவும் மாணவன் பாலாஜி எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர் இச்சம்பவம் குறித்து பள்ளியைத் தொடர்பு கொண்ட போது பள்ளி நிர்வாகம் சார்பில் பேச மறுத்து விட்டனர். அதே நேரத்தில் டியூசன் ஆசிரியர் ரவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மாணவர்களுக்கு கணக்கை நல்ல முறையில் கற்றுக் கொடுத்து எதிர்காலத்தை வளமாக்க வேண்டிய ஆசிரியரே, மாணவனின் வாழ்க்கை கணக்கை முடித்து வைத்திருப்பது வேதனைக்குரியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!