பௌத்த பிக்குகளை குற்றவாளிக் கூண்டில் இருந்து இறக்கி விட்ட நீதிபதி இளஞ்செழியன்!

திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட இரண்டு பௌத்த துறவிகளை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் குற்றவாளிக் கூண்டில் இருந்து இறங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.குறித்த இரண்டு பௌத்த துறவிகளுக்கும் எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கிற்காக நீதிமன்றுக்கு நேற்று அழைக்கப்பட்டிருந்தனர்.

குற்றம்சாட்டப்பட்ட பௌத்த துறவிகள் அவர்களின் வழக்கு விசாரணைக்கு வந்த போது, குற்றவாளிக் கூண்டில் ஏறியுள்ளனர், எனினும் அவ்விருவரையும் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் குற்றவாளிக் கூண்டில் இருந்து இறங்குமாறு பணிப்புரை விடுத்தார். மதத்தலைவர்கள் யாராகவிருந்தாலும், அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது சாலச் சிறந்ததும் அல்ல, அது மரபும் அல்ல என்ற அடிப்படையில் நீதிபதி அவர்களை குற்றவாளிக் கூண்டில் இருந்து இறங்கச் செய்துள்ளார்.

எனினும், இவர்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் முறையாக நடைபெறும் எனவும், அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்குரிய நடவடிக்கைகள் நீதிமன்றத்தினால் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!