ஐ.நா பொதுச்செயலர் பதவியை குறிவைக்கும் ரணில்!

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பெயரைப் பரிந்துரைக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

“ஐ.நா. பொதுச் சபையின் அடுத்த அமர்வில் புதிய பொதுச் செயலாளர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயர் முன்மொழியப்படும். இந்த முன்மொழிவு தொடர்பாக ரணில் விக்ரமசிங்க தற்போது பரிசீலனை செய்து வருகின்றார். ஐ.நா. பொதுச் செயலாளர் பதவியை ஏற்கவேண்டும் என்பது அவரது தனிப்பட்ட பார்வையாகும். சர்வதேச அங்கீகாரமும் அதிகாரமும் உள்ள இந்தப் பதவி வாய்ப்பு இலங்கைக்கு கிடைப்பது பெரும் பாக்கியமாகும்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஐனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி படுதோல்வியடைந்ததை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவரது சில நடவடிக்கையினாலேயே இந்த தோல்வி ஏற்பட்டதாக கட்சியின் உறுப்பினர்களினாலேயே தெரிவிக்கப்படுகின்றது.

இதன் விளைவாக, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்த்தை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அதற்கான அனுமதியையும் ரணில் விக்ரமசிங்க தற்போது வழங்கியுள்ளார்.

அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதிவியையும் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என தற்போது அந்தக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு பல்வேறு அழுத்தங்கள், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சூழ இருக்கும் நிலையிலேயே, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பதவிக்கு இவர் பரிந்துரைக்கப்படவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!