கொழும்பு வரும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் முக்கிய இலக்கு

இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மொடேகி ரொஷிமிட்சு, சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன், ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின், சுதந்திரமான – திறந்த இந்தோ- பசுபிக் வெளிவிவகாரக் கொள்கை குறித்து பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

மூன்று நாள் பயணமாக இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு வரும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர், நாளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

அத்துடன் சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்சவுடனும் அவர் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்தப் பேச்சுக்களின் போது, ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின், சுதந்திரமான – திறந்த இந்தோ- பசுபிக் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று தெரிகிறது.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டதானது, சுதந்திரமான – திறந்த இந்தோ- பசுபிக் கொள்கைக்கு, பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜப்பான் கருதுகிறது.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டது தவறானது என்று சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார்.

இந்தப் பின்னணியில் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் பேச்சுக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!