பலம்மிக்க நாடுகளின் ஆதிக்கத்துக்கு கட்டுப்படமாட்டோம்! – ஜனாதிபதி

பலம்வாய்ந்த நாடுகளின் வரையறைக்குள் கட்டுப்படுத்தப்படும் தேவை இலங்கைக்கு இல்லை என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டொஷிமிட்சு மொடேகியை நேற்று சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய நாடுகளிடம் நட்பை எதிர்பார்க்கும் அதேவேளை, ஆதிக்கம் செலுத்துவதை நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்திய ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டொஷிமிட்சு மொடேகி சுதந்திர, பகிரங்க இந்திய – பசுபிக் வலய எண்ணக்கரு குறித்து ஜப்பானுக்குள்ள அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை என்பன பிராந்திய ஒத்துழைப்பில் முக்கிய பங்கு வகிப்பதாக, ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்பொருட்டு இந்து சமுத்திர வலயம் நெருக்கடிகளற்ற அமைதியான பிராந்தியமாகக் காணப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இலங்கையில் இனங்களுக்கு இடையிலான சமாதானம், ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்காக தாம் முன்நிற்பதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கத்திற்கான அரசியல் செயற்பாடுகள், பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் என்பன குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!