தீங்கிழைக்கும் நோக்கம் இல்லை – கோத்தாவிடம் கூறிய சுவிஸ் தூதுவர்

சிறிலங்காவுக்கு தீங்கிழைக்கும் நோக்கம் எதுவும் கிடையாது என்று சுவிஸ் தூதுவர் ஹான்ஸ்பீற்றர் மொக், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவிடம் தெரிவித்தார் என, அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றுக்காலை சிறிலங்கா அதிபரைச் சந்தித்த போது, சுவிஸ் தூதரகப் பணியாளர் தொடர்பான விடயம் குறித்தே, சுவிஸ் தூதுவர், அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இரு நாடுகளின் நலனுக்காக ஒன்றிணைந்து செயற்பட விரும்புகிறோம். பதற்றமான இந்த சூழ்நிலையை நாம் சமாளிக்க வேண்டும் மற்றும் தவறான புரிதலை அகற்ற வேண்டும்.” என்றும் சுவிஸ் தூதுவர் கூறினார்.

அதற்குப் பதிலளித்த சிறிலங்கா தூதுவர், சம்பவம் குறித்த விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளார்.

“கடத்தல் என்று கூறப்படுவது முற்றிலும் இட்டுக்கட்டப்பட்டது என்பது இப்போது நன்றாக உறுதியாகியுள்ளது.

உபெர் அறிக்கைகள், தொலைபேசி உரையாடல்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் போன்ற மறுக்க முடியாத சான்றுகள் இந்த உண்மையை சுட்டிக்காட்டுகின்றன.

என்னையும் எனது அரசாங்கத்தையும் இழிவுபடுத்துவதற்கு தூதரக அதிகாரி சில ஆர்வமுள்ள தரப்பினரால் கட்டாயப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் ஏன் இப்படி நடந்து கொண்டார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக, சுவிஸ் தூதரகத்தின் ஆரம்பத்தில் செயற்பட்ட விதத்தில் எந்த தவறும் இல்லை. அது நியாயமானதே. அதன் பணியாளர்களில் ஒருவர் சிக்கலில் இருந்தால், தூதரகம் தலையிட வேண்டும்.

உண்மையை வெளிப்படுத்து வகையில் விசாரணையை நடத்த அரசாங்கத்துடன் ஒத்துழைக்குமாறு தூதுவரிடம் , சிறிலங்கா அதிபர் கேட்டுக்கொண்டார்.” என்றும் அதிபர் செயலக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!