19 நீக்கம், நாடாளுமன்ற கலைப்பு, மாகாண சபை தேர்தல் – கோத்தாவின் பதில்கள்

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிச்சயமாக மாற்றப்படும் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதிபர் செயலகத்தில் நேற்று ஊடகங்களின் ஆசிரியர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

19 ஆவது திருத்தச் சட்டம் குறித்து விவாதம் நடைபெறுவதால் அதை மாற்ற விரும்புகிறீர்களா என்று கேட்டபோது,

“அதை நிச்சயமாக மாற்ற வேண்டும். இது பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

19வது திருத்தத்தினால், முந்தைய நிர்வாகத்தின் போதும், அதிபருக்கும் அரசாங்கத்திற்கும் இடையே பிரச்சினைகள் இருந்தன.

சட்டவல்லுநர்கள் எனக் கூறிக் கொண்டவர்களால் தயாரிக்கப்பட்டிருந்தாலும், அது நாடாளுமன்றத்தைக் கலைத்தல் மற்றும் அரசாங்கத்தை மாற்றுவது தொடர்பாக, நிறைவேற்று அதிகாரத்துக்கும் நீதித்துறைக்கும் இடையிலான மோதலில் தான் முடிந்தது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தை கலைப்பது உறுதி

சிறிலங்கா நாடாளுமன்றம் அடுத்த மார்ச் மாதம் கட்டாயம் கலைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச கூறினார்.

“நான்கரை ஆண்டுகள் முடிந்ததும், நாடாளுமன்றம் நிச்சயமாக மார்ச் மாதம் கலைக்கப்படும்.

அரசாங்கத்தை நடத்துவதற்குத் தேவையான பெரும்பான்மை பலம் தேவை என்பதால், நாடாளுமன்றம் நிச்சயமாக கலைக்கப்படும்.” என்று அவர் கூறினார்.

மாகாணசபைத் தேர்தல் எப்போது?

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“நடத்தப்படாமல் உள்ள அனைத்து தேர்தல்களும் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

ஆனால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டங்களை நாடாளுமன்றம் முதலில் அங்கீகரிக்க வேண்டும்.

எனவே, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!