ராஜிதவுக்கு எதிராக விசாரணை- திசை திருப்பப்படும் வெள்ளை வான் கடத்தல் குற்றச்சாட்டு!

ஜனாதிபதித் தேர்தல் பிரசார காலத்தின் போது இரண்டு குற்றவாளிகளை வெள்ளை வான் கடத்தல்காரர்கள் என சித்தரித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டார்கள் என, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹம்மட் ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள மேற்படி இரு போலி கடத்தல்காரர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். சட்ட மாஅதிபரின் உத்தரவையடுத்து அவர்கள் மீதான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கூறியுள்ளதன்படி கடந்த நவம்பர் 10 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தபானத் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் தொலைக்காட்சியில் விசேட செய்தியறிக்கையொன்றின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்களை வெள்ளை வானில் கடத்தியதாக பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறியுள்ளனர்.

மேற்படி பொய்க் குற்றச்சாட்டை கூறியமைக்காக தங்களுக்கு 30 இலட்ச ரூபா தருவதாக கூறப்பட்டு அதில் 20 இலட்ச ரூபா பணம் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளனர். ஜனாதிபதி தேர்தலையடுத்து அவர்கள் இருவரையும் தலைமறைவாக இருக்குமாறும் கூறியுள்ளனர். மேற்படி சம்பவத்தின் பின்னணியில் ராஜிதவும் ரூமி மொஹம்மட்டும் இருந்ததை வெளியிடாமல் இருக்க 100 இலட்சம் ரூபாவை இருவரும் கோரியிருந்ததாக சி.ஐ.டி. விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

அதேவேளை சந்தேக நபர்களில் ஒருவரான வட்டரக்க கமகே அத்துல சஞ்சீவ மதநாயக்க என்றழைக்கப்படும் அத்துல என்பவர் பயங்கர குற்றவாளி என்றும் இராணுவத்தை விட்டு ஓடிய பலருடனும் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருடனும் சேர்ந்து இவர் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்ததும் விசாரணையின் போது மேலும் தெரியவந்துள்ளது. அத்துடன் படஹோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலையுடனும் இவர்கள் தொடர்புபட்டுள்ளனர்.

போதைவஸ்து கடத்தல்காரர் ஒருவர் மற்றொரு போதைவஸ்து கடத்தல்காரரை கொலை செய்வதற்காக இவர்களுக்கு 20 இலட்சம் ரூபாவுக்கு ஒப்பந்தம் பேசியதாகவும் இவர்கள் தமது ஒப்பந்தப்படி கொலைசெய்ய வேண்டியவர்களை வெள்ளை வான்களில் கடத்திச் சென்றுள்ளனர். படையினர் அவர்களை கடத்தியது போல தெரியும் வகையில் இவர்கள் கொலை செய்த நபர்களை கடத்தியுள்ளனர். மேற்படி இரட்டை கொலையுடன் இவர்கள் 12 குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் அவை தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது எனவும், குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!