உரிய நடைமுறைகளையே பின்பற்றுகிறோம் – சுவிசிடம் கூறிய சிறிலங்கா

சுவிஸ் தூதரகப் பணியாளர் மீதான விசாரணைகள் விடயத்தில், இரு நாடுகளும் மதிக்கும் அனைத்துலக விதிமுறைகளுக்கு இணங்க, ஒவ்வொரு கட்டத்திலும் உரிய செயல்முறைகள் பின்பற்றப்பட்டுள்ளது என, சுவிஸ் வெளிவிவகார அமைச்சரிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சுவிஸ் தூதரகப் பணியாளர் கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ் தொடர்பான விசாரணையின் நிலை குறித்து, சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் இக்னாசியோ காசிஸ் நேற்று மாலை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவுடன் உடன் தொலைபேசியில் உரையாடியிருந்தார்.

இதன்போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், நாட்டின் தேசிய சட்டம் மற்றும் அனைத்துலக நீதி நியமங்களுக்கு இணங்கவே சிறிலங்கா செயற்படுகிறது, அதற்கு மாறாக இடம்பெறுவதான எந்தவொரு கூற்றும் தவறானது என்று குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து முதன்முதலில் முறைப்பாடு கூறப்பட்டதில் இருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சுவிஸ் வெளிவிவகார அமைச்சருக்கு விரிவாக எடுத்துக் கூறிய தினேஸ் குணவர்தன, ஒவ்வொரு நடவடிக்கையின் போதும், இரு நாடுகளும் மதிக்கும் அனைத்துலக விதிமுறைகளுக்கு இணங்க உரிய செயல்முறை பின்பற்றப்பட்டுள்ளது என்பதை வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு நல்லுறவுகளை கருத்தில் கொண்டு, இந்த செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு சாத்தியமான அனைத்து ஒத்துழைப்புகளையும் விரிவுபடுத்துமாறு சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், “கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ் ஒரு இலங்கையர், இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. நாட்டின் சட்டத்தின்படி சிறிலங்கா அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும். அவருக்கு சாத்தியமான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அவரின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, இது தொடர்பாக கொழும்பில் உள்ள சுவிஸ் தூதுவருடன், வெளிவிவகார அமைச்சு தொடர்ந்து கலந்துரையாடல்களில் ஈடுபடும் என்று உறுதியளித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!