யாழில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – நெதர்லாந்து தூதுவர்

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக நெதர்லாந்து தூதுவர் உறுதியளித்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே தெரிவித்தார்.

வடமாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர், எச்.இ.ஜோவான் டோர்னிவார்ட் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இச் சந்திப்பின் போதே நெதர்லாந்து தூதுவர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.

குறித்த சந்திப்பு வடமாகாணஆளுநரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

சந்திப்பு தொடர்பாக வட மாகாண ஆளுநர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக நெதர்லாந்து தூதுவர் உறுதியளித்துள்ளார்.

யாழின் புராதன கட்டடங்கள் மற்றும் புராதன சின்னங்களையும் பாதுகாப்பதற்கு நெதர்லாந்து அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது.

இதற்கு தேவையான பூரண ஆதரவை வழங்குவதாக நெதர்லாந்து தூதுவர் உறுதியளித்துள்ளார்.

யாழில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து கவனம் செலுத்திய தூதுவர், கடல் நீரை குடிநீராக்கல், நிலக்கீழ் நீர் மாசை தடுத்தல், மழை நீர் சேமிப்பு ஆகியவற்றில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக சந்திப்பின்போது ஆராய்துள்ளார்.

மல்வத்து ஓயா மற்றும் இரணைமடு நீர்த்தேக்கத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரை கொண்டுவருதல் உள்ளிட்ட விடயங்களும் இதன்போது கருத்திற்கொள்ளப்பட்டதாகவும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!