அந்தக் சமூக விரோதிகள் யார்? – ரஜினிக்குத் திருமாவளவன் ஆலோசனை

திருப்பூரில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று திருப்பூர் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகள் குறித்துப் பேசுவதற்கான வாய்ப்பு சட்டப்பேரவையில் தி.மு.க உறுப்பினர்களுக்கு மறுக்கப்படுவதால், அந்தக் கட்சியினர் மாதிரி சட்டப்பேரவை கூட்டத்தை நடத்துகிறார்கள்.

அவர்களது இந்தப் போராட்ட வடிவத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது. திரைப்படத்தில் இயக்குநர்கள் சொல்லித்தருவதை அப்படியே சொல்வது ரஜினிகாந்துக்கு வாடிக்கையானது. அதைப்போன்றே அரசியலில் யாரோ சொல்லித் தருவதை அவர் பேசிக்கொண்டு இருக்கிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக கூறும் ரஜினிகாந்த், அந்தக் சமூக விரோதிகள் யார் யார் என்பதையும் எழுத்துப்பூர்வமாகக் காவல்துறையிடம் புகாராக அளிக்க வேண்டும்.

இந்திய அளவில் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராகவே மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க அரசின்மீது நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொலைக்காட்சியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் எனத் தமிழக முதல்வர் பழனிசாமி கூறியிருப்பதால், அதில் கூட மத்திய அரசின் தலையீடு இருக்கலாம் என எங்களுக்குச் சந்தேகம் எழுகிறது. மேலும் துப்பாக்கிச் சூட்டின் உண்மைத் தன்மையை தனி நபர் ஆணையம் வெளிக்கொண்டு வராது” என்று பேசினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!