கடத்தல் குற்றச்சாட்டுடன் சுவிஸ் தூதரகத்துக்கு தொடர்பு இல்லை – கோத்தா

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக சுவிஸ் தூதரக பணியாளர் கூறிய குற்றச்சாட்டுடன், கொழும்பில் சுவிஸ் தூதரகம் தொடர்புபட்டிருக்கவில்லை என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுச் செய்தியாளர்களை நேற்று சந்தித்த சிறிலங்கா அதிபரிடம், கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகளில் சுவிஸ் தூதரகத்துக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,

“நான் அப்படி நினைக்கவில்லை. ஆனால், கார்னியரின் விவகாரத்தை, இரண்டு அரசாங்கங்களுக்கு இடையிலான பிரச்சினையாக மாற்ற வேண்டாம் என்று சுவிஸ் தூதுவர் ஹான்ஸ்பீற்றர் மோக்கிடம், கூறினேன்.

அத்துடன், அவரது குற்றச்சாட்டுகளில் இருந்து தூதரகம் விலகி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டேன்.

சுவிஸ் தூதரகத்தின் ஆரம்ப எதிர்விளைவு குறித்து, எங்களால் தவறு காணமுடியாது.

ஏனெனில் செய்தி முதலில் கிடைத்த போது, தமது பணியாளருடன் நிற்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருந்தது.” என்று குறிப்பிட்டார்.

கார்னியர் விவகாரத்தை கையாளுவதில் உரிய செயல்முறை பின்பற்றப்படவில்லை என்ற சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் குற்றச்சாட்டுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா அதிபர்,

“அதில் எந்த உண்மையும் இல்லை. மருத்துவ காரணங்களுக்காக கார்னியர் பிரான்சிசை, விமான அம்பியூலன்ஸ் மூலம் சுவிற்சர்லாந்திற்கு அழைத்துச் செல்வதற்கு அனுமதியளிக்க அரசாங்கம் உடன்பட்டது,

ஆனால், அவரது குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் எந்த ஆதாரமும் இல்லை என்று கண்டறியப்பட்ட போது, அனுமதி மறுக்கப்பட்டது

நீதிமன்றத்தில் நிறுத்தப்பட முன்னர், அவர் குற்ற விசாரணைத் திணைக்களத்தினால் விசாரிக்கப்பட்டார். அதன் பின்னரு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

குற்ற விசாரணைத் திணைக்களத்தினால் விசாரிக்கப்பட்ட போது அவருடன், சட்டவாளரையும் இருக்க அனுமதித்தோம், எனக்குக் கூட அந்த சலுகை வழங்கப்படவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!