உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி மிதிவண்டியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி!

ராமநாதபுரம் மாவட்டம், திருநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயசாமி, ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவரது மகன் மணிகண்டன்(36). 10-ம் வகுப்பு படிக்கும் போது கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட விபத்தில் தனது இடது காலை முழுவதுமாக மணிகண்டன் இழந்து விட்டார். தற்போது எம்.காம், பி.எட், பிலிட் படித்து முடித்த இவர் தனது கால் ஊனத்தை கருத்தில் கொள்ளாமல் மற்றவர்களை போல் தானும் ஏதாவது சாதனைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது ஒற்றைக்காலில் சைக்கிள் ஓட்டி பழகியுள்ளார்.

பின்னர் இதனைக் கொண்டே சாதனைகள் படைக்கும் எண்ணத்துடன் நதிநீர் இணைப்பு, மழைநீர் சேமிப்பு, மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு, உடல் உறுப்பு தானம், காற்று மாசுபடுவதை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக சிந்தனைகளை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலமாக தமிழகம் முழுவதும் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோயமுத்தூர் வந்த இவர் நேற்று பெருந்துறைக்கு வந்தார். பெருந்துறை புதிய பஸ் நிலையம் பகுதியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்களை வினியோகித்த அவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சேலம் நோக்கி சென்றார். வருகிற 1-ந் தேதி சென்னை மெரினா பீச்சில் தனது பயணத்தை நிறைவு செய்யும் இவர் அங்கு தலைமை செயலகத்தில் முதல்வரை நேரில் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அரசு போட்டித்தேர்வுகளில் கவனம் செலுத்தி வரும் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது 3-வது தடவையாக இவர் இந்த பயணத்தை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!