“சிங்கள மக்கள் அதிகார பரவலாக்கத்துக்கு எதிரானவர்கள் அல்லர்” : விக்கினேஸ்வரன்

பெரும்பான்மை சிங்கள மக்கள் அதிகார பரவலாக்கத்துக்கு எதிராக இருப்பதால் தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை பரவலாக்க முடியாது என்றும் பொருளாதார அபிவிருத்தியே அவர்களுக்கு தேவையானது என்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துவரும் கருத்துக்களை மறுதலித்து எதிர்வினை ஆற்றியிருக்கும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி. வி விக்னேஸ்வரன், சிங்கள மக்கள் அதிகார பரவலாக்கத்துக்கு எதிரானவர்கள் அல்லர் என்றும் அதிகாரத்தை பரவலாக்குவதற்கு ஜனாதிபதி தயங்குவது வடக்கு கிழக்கை சிங்கள பௌத்த அலகாக ஆக்குவதற்காகவே ஆகும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதிகார பரவலாக்கத்தை புதிய ஜனாதிபதி நிராகரித்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி மட்டும் பொதுமக்களுக்கு போதுமானது என்றும் அவர் கூறியிருக்கிறார். நாட்டின் பாதுகாப்பே முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். இந்த கருத்துக்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்? என்று ஊடகவியலாளர் ஒருவர் ஆங்கிலத்தில் அனுப்பிய கேள்வி ஒன்றுக்கு அளித்துள்ள நீண்ட பதிலிலேயே விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.

“சிங்கள மக்கள் அதிகாரத்தை பகிர்வதையோ அல்லது உயர்ந்த அளவில் மனித உரிமைகளை பேணுவதற்கோ எதிரானவர்கள் அல்லர். இனப்பிரச்சினையை தீர்ப்பதுதான் சமாதானமும் சுபீட்சமும் மிக்க சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான நிச்சயம் மிக்க ஒரு வழி என்று அவர்கள் அறிவார்கள்” என்று குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன் அதிகார பரவலாக்கம், சமாதானத்துக்கு ஆணைகேட்டு 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருக்கு (சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க) 62 சத வீதமான மக்கள் வாக்களித்தமையை உதாரணம் காட்டியுள்ள விக்னேஸ்வரன், ஜனாதிபதி அடுத்த தேர்தலில் தனது கட்சி ஊடாக உயர்ந்தளவு அதிகார பரவலாக்கத்துக்கு வாக்குறுதி அளித்து மக்கள் முன் செல்லவேண்டும் என்று தனது பதிலில் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.

“தமிழர்களாகிய எங்களுக்கு என்ன சிறந்தது என்பதை நிச்சயமாக சிங்களவர்கள் தீர்மானிக்க முடியாது ” என்றும் ” அரசியல் தீர்வு இல்லாத பொருளாதார அபிவிருத்தியானது வடக்கு கிழக்கில் முற்றுமுழுதாக தமிழ் சமூகத்தை இல்லாமல் செய்வது என்றே அர்த்தப்படும் ” என்றும் விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஸ்வரன் தனது பதிலில் தெரிவித்துள்ளதாவது,

கேள்வி: அதிகார பரவலாக்கத்தை புதிய ஜனாதிபதி நிராகரித்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி மட்டும் பொதுமக்களுக்கு போதுமானது என்றும் அவர் கூறியிருக்கிறார். நாட்டின் பாதுகாப்பே முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். இந்த கருத்துக்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: ஜனாதிபதி என்ன கூறியிருக்கிறார் என்று எனக்கு தெரியாது. ஊடகங்களின் மூமாகவே அவர் இவ்வாறு கூறியிருப்பதாக தெரிகிறது. ஜனாதிபதி இதுவரை கூறியிருக்கின்ற, செய்திருக்கின்ற நல்ல விடயங்களை நான் ஆதரித்திருக்கிறேன். ஜனாதிபதி கூறியதாக கூறப்படும் கருத்துக்கள் உண்மையில் அவராலேயே கூறப்பட்டிருந்தால் அவை தீங்கு செய்யும் நோக்கம் அற்ற மிகவும் அப்பாவித்தனமானதும் சிறுபிள்ளைத்தனமானதுமானதுமாகவே எனக்குப் படுகின்றது.

1. அதிகார பரவலாக்கம்

அதிகாரப் பரவலாக்கம் என்றால் என்ன ? அதிகாரம் ஒரு மத்திய இடத்தில் குவிக்கப்படுகின்றது. இதனால் புற அலகுகள் (ஏனைய இடங்கள்) பாதிக்கப்படுகின்றன. இதனால்தான், கிளை ஆட்சி என்ற ஒரு கோட்பாடு இருக்கிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், மத்திய ஆட்சி கட்டமைப்பானது உள்ளூர் அல்லது துணை அலகுகள் அந்த அந்த மட்டங்களிலான விவகாரங்களுக்கு மிகச்சிறந்த முடிவுகளை எடுப்பதற்காக அனுமதி அளிப்பதாகும். உறுப்பு நாடுகள், அலகுகள், பிராந்தியங்கள் மற்றும் கிளைகள் என்று வரும்போது அவற்றின் தனித்துவமான இயல்பை வெளிப்படுத்தும் தனித்தன்மை மற்றும் அவற்றின் பிரத்தியேகமானதும் தனிச்சிறப்புமிக்கதுமான இருப்பை தாங்கி நிற்கும் பண்புகள் இருக்குமானால், அவ்வாறான அந்த தனிச்சிறப்புமிக்க சிறப்பியல்புகள் நாட்டின் ஏனைய பகுதியுடன் அருகருகாக அமைந்திருப்பதற்காக மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஏற்பாடே அந்த அலகுகளின் சுய நிர்ணய உரிமைகளை ஒரு நாட்டுக்குள் ஏற்றுக்கொள்வதாகும்.

ஒரு நாட்டுக்குள் சுய நிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவதற்கான மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அரசியலமைப்பு ஏற்பாடே ‘சமஷ்டி’ ஆகும். இதன்படி, ஆங்கிலம் பேசும் கனடாவில் இருந்து தனித்துவமானதும் பிரத்தியேகமானதுமான தனிச்சிறப்பியல்புகளை கொண்டிருக்கும் பிரெஞ்சு பேசும் கியூபெக் சமஷ்டி அலகாக இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. தமது சொந்த விடயங்களில் சுதந்திரமாக இருக்கும் அதேவேளை தேசிய மற்றும் பொதுவான நோக்கங்களுக்காக பிராந்தியங்கள் ஒருநாட்டுக்குள் இணைந்திருப்பதை குறிக்கிறது. ஐக்கிய அமெரிக்காவில் அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது அமெரிக்க தெற்கு மாநிலங்களின் பிரிவினைவாதிகளிடம் இருந்து ஒன்றியத்தை (Union) பாதுகாப்பதற்காக போரிட்ட வடக்கு மாநிலங்களுக்கு ‘சமஷ்டி’ என்று பெயரிடப்பட்டது.

பின்னர் எல்லா மாநிலங்களும் ஒன்றாக ‘அமெரிக்க ஐக்கிய நாடுகள்’ ஆகின. “வாழு , வாழ விடு” என்ற அடிப்படையில் முற்றிலும் வேறுபட்ட பிரதேசங்கள், அவற்றின் நலன்கள் மற்றும் அலகுகள் ஒன்றாக வாழ்வதற்கு ஏற்படுத்தப்பட்ட சீரிய ஒரு அலசியலமைப்பு ஏற்பாடே சமஷ்டியாகும்.

பறவைகளின் வெவ்வேறான இறக்கைகளுடனான தமது உறவு, நட்பு மற்றும் தொடர்பு ஆகியவற்றை பேணுகின்ற அதேவேளை, பறவைகளின் அதே இறக்கைகள் ஒன்றிணைவதே இதன் எண்ணக்கரு. வெள்ளை லெஹார்ன், சிவப்பு ரோட்ஜலேன் மற்றும் நாட்டு கோழிகள் ஆகியவற்றுக்கு பண்ணையாளரினால் வெவ்வேறு கூடுகள் கொடுக்கப்டுகின்றன. இரவில் அவை தமக்குரிய கூடுகளில் வாழ்கின்றன. ஒன்றாக கூடி திரிவதற்காக காலையில் வெளியே வருகின்றன. இவை அனைத்துமே ஒன்றிணைந்து தமது முதலாளியின் பண்ணையை ஆக்குகின்றன. இது ஒரு ஒரு சமஷ்டி பண்ணை.

1949 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழரசு கட்சி உருவாக்கப்பட்டபோது சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட பிழையான ஒரு புரிதல் இன்னமும் இருந்துவருகிறது. Federalism என்ற பதத்துக்கு யார் மொழிபெயர்ப்பு செய்தார்களோ தெரியாது. ஆனால், தமிழ் அரசு என்பது Federalism என்பதற்கு பொருத்தமற்றது.கூட்டரசு என்று இருந்திருக்க வேண்டும். மத்தியில் இருந்து வேறுபட்ட ஒரு சுதந்திர தமிழ் அரசுக்கானது என்று சாதாரண தமிழ் மக்கள் நினைத்தார்கள். தமிழரசு கட்சி தனி நாட்டை பெற்றுத் தரும் என்று அவர்கள் நம்பினார்கள்.

சமஷ்டி கட்சி பிரிவினையை ஏற்படுத்துவதாக சிங்கள மக்கள் நினைத்தார்கள். அதனால், சமஷ்டி என்ற பதம் இலங்கையர்களின் மனதில் குறிப்பாக சிங்கள மக்கள் மனதில் ‘பிரிவினை’ என்றும் ‘பிரிந்து செல்லுதல்’ என்றும் ஆழப்பதிந்து விட்டது. ஆனால் உண்மை என்னெவன்றால் சமஷ்டி என்பது வேறுபட்ட இனங்கள் மத்தியிலே ‘ஒற்றுமை’ மற்றும் ‘ தோழமை’ ஆகியவற்றை தக்கவைத்துக்கொள்வதற்கான மிகச் சிறந்த கண்டுபிடிப்பு சமஷ்டி ஆகும். வேற்றுமையில் ஒற்றுமையை சம்ஷடியினால் பெறமுடியும். இல்லாவிட்டால், பெரும்பான்மையினரின் சர்வாதிகாரமே ஏற்படும்.

ஜனாதிபதி அவர்கள் தனது இராணுவ பின்னணி காரணமாக பெரும்பான்மையினரின் மைய அதிகார படுத்தலையும், சர்வாதிகாரத்தையும் விரும்புகிறார் போல தெரிகிறது. ஆனால் வடக்கு கிழக்கில் இன்னமும் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையானவர்கள் என்பதை அவர் மறந்துவிட்டார். அவரின் வாதத்தின் அடிப்படையில் அதிகார பரவலாக்கம் நிராகரிக்கப்படவேண்டும் என்றால் அவர் வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்களின் பிரிவினை மற்றும் அங்கு சிறுபான்மையாக வாழும் (சிங்கள) மக்கள் மீதான அவர்களின் ( தமிழ் மக்களின் ) சர்வாதிகாரத்தை விரும்புகிறார் என்று அர்த்தம்.

வடக்கு கிழக்கில் சிங்கள மக்கள் சிறுபான்மையானவர்கள். பிரித்தானியர்களின் காலத்தின்போதே சிங்களவர்கள் முற்றிலும் தமிழ் பேசும் பிரதேசங்களாக இருந்த வடக்கு கிழக்குக்கு கொண்டுவரப்பட்டார்கள். 1933 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு கிழக்கில் தமிழ் இராச்சியங்கள் இருந்தன. தமிழ் பேசும் தெலுங்கு மன்னரான கண்டிய மன்னனுக்கு கப்பம் செலுத்தும் வன்னியர்கள் என்று அழைக்கப்படும் குறுநில மன்னர்கள் கிழக்கில் இருந்திருக்கலாம். ஆனால், கிழக்கு முற்றிலும் தமிழ் பேசும் ஒரு பிரதேசமாகும்.

எனது இளமை காலத்தில் நான் அடிக்கடி கிழக்குக்கு செல்வேன். அங்கே சில இடங்களில் முஸ்லிம்கள் இருந்தார்கள். ஆனால், அதிகளவில் விபூதி அணியும் சைவ தமிழர்களையே நான் கண்டேன். பருவகாலங்களில் மீன் பிடிப்பதற்கு வரும் சிங்கள மீனவர்களை தவிர மிகவும் அரிதாகவே அங்கு சிங்களவர்களை நான் காண முடிந்தது. ஆகவே, வடக்கு கிழக்குக்கு அதிகார பரவலாக்கத்தை நிராகரிப்பது அங்குள்ள மக்கள் மீது மீது சிங்கள மக்களின் சர்வாதிகாரத்தை ஏற்படுத்துவதாகும். தமிழ் மக்கள் தமது விடயங்களை தாமே கையாளுவதற்கு சுயேச்சையும் சுதந்திரமும் அளிக்கப்படவேண்டும். அவர்கள் மாலியில் உள்ள திம்புக்டோவில் (Timbuctoo) இருந்து கொண்டுவரப்பட்ட அடிமைகள் அல்லர். தனது இராணுவ பின்னணிக்கு நேர்மையாக இருக்கும் வகையில் புதிய ஜனாதிபதி வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் மீது சிங்கள மக்களின் சர்வாதிகார மேலாதிக்கத்தை விரும்புகிறார். வடக்கு கிழக்கில் என்ன அடிப்படையில் ஜனாதிபதி சிங்கள மேலாதிக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறார்?

i . வடக்கு கிழக்கு சிங்கள மக்களுக்கு உரியது என்று உரிமை கோருவதற்கு கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றபோதிலும் வடக்கு கிழக்கு ஒருபோதுமே சிங்கள மக்களின் தாயகமாக இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மை. வடக்கு கிழக்கு பற்றி கல்விசார் வெளியீடுகளோ அல்லது சுற்றுலாத்துறை அமைப்புக்களோ எதுவும் குறிப்பிடவில்லை என்பதற்காக புத்தர் பிரானுக்கு முற்பட்ட காலம் முதலே வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தொடர்ச்சியான பிரதேசமாக இருந்ததையோ அல்லது அதன் தனித்துவத்தையோ இல்லாமல் செய்துவிட முடியாது.

ii . கடந்த காலத்தில் வடக்கு கிழக்கில் பௌத்தர்கள் இருந்தபோது, துறவிகள் தமிழர்களே ஆவர். சிங்களவர்கள் அல்லர். தமிழ் கிராமங்களுக்கு கடந்த 100 வருடங்களுக்கு உள்ளாகவே சிங்கள பெயர்கள் இடப்பட்டன. அண்மைய காலங்களில் செயற்கையாக அவை ஏற்படுத்தப்பட்டன.

iii . முழு தீவிலும் 1833 ஆம் ஆண்டு பிரித்தானியர்கள் நிர்வாகத்தை ஒன்றுபடுத்தியபோது தமிழ் பேசும் மக்கள் சிங்கள பகுதிகளுக்குள்ளும் சிங்களம் பேசும் மக்கள் தமிழ் பேசும் பகுதிகளுக்குள்ளும் சென்றார்கள். சுதந்திரத்துக்கு முன்னர் நான் அனுராதபுரத்தில் இருந்தபோது நகர சபை தலைவராக 18 வருடங்களுக்கு தமிழர் ஒருவரே இருந்தார். அப்போது பழைய அனுராதபுர நகரம் இருந்தது. ஆகவே, என்ன அடிப்படை அல்லது உரிமையின் அடிப்படையில் வடக்கு கிழக்கில் மேலாதிக்கத்தை ஏற்படுத்துவதற்கு அவர் நினைக்கிறார்? தமிழர்களாகிய எங்களுக்கு என்ன சிறந்தது என்பதை நிச்சயமாக சிங்களவர்கள் தீர்மானிக்க முடியாது. வடக்கு கிழக்கில் உள்ள எங்கள் எல்லோரையும் சிங்கள மக்கள் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதால் நாங்கள் பயங்கரவாதிகளாகவோ அல்லது குறைந்த பிரஜைகளாகவோவோ ஆக முடியாது.

சிங்கள மக்கள் அதிகார பரவலாக்கத்தை நிராகரிப்பதால் அதனை செய்யமுடியாது என்று ஜனாதிபதி பல இடங்களில் கூறியிருக்கிறார். இது எதனைக் குறிக்கிறது? தமிழ் பேசும் மக்களின் பிரதேசங்களை பலவந்தமாக அல்லது மறைமுகமாக எடுத்தபின்னர் தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை பரவலாக்க வேண்டாம் என்று சிங்கள மக்கள் கூறுகிறார்கள். அதனால், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் சிங்கள மக்களின் சர்வாதிகாரத்துக்கு நிரந்தரமாக பழக்கப்படவேண்டும் என்று ஜனாதிபதி நினைக்கிறார் போலும். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு நல்ல ஆலோசனை வழங்கப்படவேண்டும்.

நான் எனது சிங்கள சகோதரர்களுடன் உயர் மற்றும் சாதாரண சமூக மட்டம் வரை தொடர்பில் இருக்கிறேன். தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை பரவலாக்க கூடாது என்பதற்காக சிங்கள மக்கள் ஜனாதிபதிக்கு தேர்தலில் வாக்களிக்கவில்லை. ஏப்பிரல் 21 பின்னரான பாதுகாப்பு கவலைகள், எல்லா மட்டங்களிலுமான பெரியளவிலான ஊழல், வாழ்கை செலவு அதிகரிப்பு அரசாங்கத்துக்குள் ஏற்பட்ட உள்ளக சச்சரவு ஆகியவை அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை மக்கள் மீது ஏற்படுத்தி இருந்தன. சிங்கள மக்களின் விருப்பங்களுக்கு மாறாக சஜித் பிரேமதாச செயற்பட முயற்சித்தார் என்ற அச்சமும் சில சிங்கள தொகுதிகளில் இருந்தது உண்மையே. ஆனால், அது மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்கள் ஆகும்.

சமாதானம் மற்றும் சுபீட்சத்துக்கு சிங்கள மக்கள் எதிரானவர்கள் அல்லர். வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக தமிழர்களே பிரத்தியேகமாக வாழ்ந்தமையையும், அவர்களின் தனித்துவ தன்மையையும் பல அடிமட்ட சிங்கள மக்கள் அறிவார்கள். உண்மையில், வேறுபட்ட பிம்பத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளின் மீதே அவர்கள் அதிருப்தி கொண்டிருக்கிறார்கள். சிங்கள மக்கள் அதிகாரத்தை பகிர்வதையோ அல்லது உயர்ந்த அளவில் மனித உரிமைகளை பேணுவதற்கோ எதிரானவர்கள் அல்லர். இனப்பிரச்சினையை தீர்ப்பதுதான் சமாதானமும் சுபீட்சமும் மிக்க சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான நிச்சயம் மிக்க ஒரு வழி என்று அவர்கள் அறிவார்கள். ஆகவே, ஜனாதிபதி அடுத்த தேர்தலில் உயர்ந்தளவு அதிகார பரவலாக்கத்துக்கு தனது கட்சி ஊடாக வாக்குறுதி அளிக்கவேண்டும். 1994 ஆம் ஆண்டு தேர்தலில் இது நடந்திருந்தது. 62 சதவீதத்துக்கும் அதிக மக்கள் ஜனாதிபதி வெற்றியாளருக்கு வாக்களித்திருந்தனர்.

கொழும்பு நூதனசாலை, தேசிய சுவடிகள் திணைக்களம், வரலாறு, மானிடவியல், தொல்லியல் மற்றும் தொல் உயிரியல் ஆகியவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சிங்கள அதிகாரிகள் அங்குள்ள எமது பழம்பொருட்கள், கலைப்பொருட்கள், கலை சார்ந்த பொருட்கள், சுவடிகள் மற்றும் நாணயங்களை தமிழ் ஆய்வாளர்கள் பயன்படுத்துவதற்கு அனுமதிப்பதில் பேரினவாத தன்மையுடன் நடந்துகொள்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் என்னிடம் உள்ளன. இவற்றை பயன்படுத்துவதற்கு ஆய்வாளர்கள் தமது பெயர் மற்றும் தொலைபேசி விபரங்களுடன் விண்ணப்ப படிவம் ஒன்றை அனுப்ப வேண்டும்.

ஆனால், அனுமதி உடனடியாக வழங்கப்படுவதில்லை. ஆய்வாளரை தாம் தொலைபேசி முலம் தொடர்பு கொள்வதாக அங்குள்ள அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு எந்த தொலைபேசியும் அவர்களுக்கு வருவதில்லை. ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் அழைப்புக்களுக்கும் பதில் அளிக்கப்டுவதில்லை. ஆய்வாளர்கள் தமது ஆய்வுகளை செய்வதை தாங்கள் தடுத்தாலன்றி தமிழர்களின் புராதன இருப்பு வெளிப்படுத்தபட்டுவிடும் என்று அச்சப்படும் அதிகாரிகளின் முட்டாள்தனத்தில் இன்று இலங்கையின் ஆராய்ச்சி பாதிக்கப்படுகின்றது. எமது தனித்துவம் மிக்க ஒரு வரலாற்று ஆய்வாளர் சில வரலாற்று சான்றுகளை பயன்படுத்துவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக முயன்றுவருகிறார். ஆனால் அவரது முயற்சி வெற்றி அளிக்கவில்லை.

2. பொருளாதார அபிவிருத்தி மட்டுமே தேவையானது

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பொருளாதார அபிவிருத்தி மிகவும் அவசியம் என்பதில் எந்த சதேகமும் இல்லை. ஆனால், மாகாணங்களின் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களினால் பொருளாதார அபிவிருத்தி மேற்கொள்ளபப்டுவதாக இல்லை. எந்த அதிகார பரவலாக்கமும் இன்றி மத்தியின் பொருளாதார அபிவிருத்தி என்று கூறப்படுவதை செயற்படுத்துவதே இதன் நோக்கம். தமிழ் மாகாணங்களின் வளங்களை இல்லாமல் செய்வதும் மத்தி அல்லது ஏனைய மாகாணங்களை வளப்படுத்துவதுமே நோக்கமாக தெரிகிறது. அத்துடன் பொருளாதார அபிவிருத்தி என்று சொல்லப்படும் திட்டம் குடியியல் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. தமிழர்களின் தாயகத்தை கபளீகரித்து சிங்கள மக்களின் நன்மைக்காக இந்த நாட்டை முழுமையான சிங்கள பௌத்த நாடாக ஆக்குவதே இதன் நோக்கம்.

தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் வடக்கு கிழக்கை தமிழர்களின் பூர்வீக தாயகமாக ஏற்றுக்கொண்டிருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அரசியல் தீர்வு இல்லாத பொருளாதார அபிவிருத்தியானது வடக்கு கிழக்கில் முற்றுமுழுதாக தமிழ் சமூகத்தை இல்லாமல் செய்வது என்றே அர்த்தப்படும்.

3. பாதுகாப்பு மிகவும் முக்கியமானது

குறிப்பாக ஏப்பிரல் 21 ஆம் திகதிக்கு பின்னர் பாதுகாப்பு முக்கியமானது என்று நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். மத்திய அரசுதான் எங்களை பாதுகாக்க முடியும் என்று ஏன் ஜனாதிபதி நினைக்கிறார் ? நிச்சயமாக அதிகாரம் எமக்கு பகிரப்பட்டால் எம்மை நாமே பாதுகாக்க முடியாதா ? எமது இளையோர்கள் அரசாங்கத்தையும் முப்படைகளையும் ஏறத்தாழ 30 வருடங்களாக எட்ட வைத்திருந்தார்கள். பல நாடுகள் அளித்த உதவிகள் தான் அவர்களை இல்லாமல் செய்தது. எமக்கு போதிய அதிகாரம் பகிரப்பட்டால் நிச்சயமாக எம்மை நாமே பாதுகாக்க முடியும். பாதுகாப்பு பற்றி கதைப்பது என்னைப்பொறுத்தவரையில் வடக்கு கிழக்கை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கும் எமது வளங்களை அபகரிப்பதற்குமே என்று எனக்கு படுகின்றது. மணல், கிரவல் மற்றும் ஏனைய வளங்கள் தொடர்பில் போக்குவரத்து அனுமதி வாபஸ் செய்யப்பட்டமை வெளியிடத்தவர்கள் பயன்பெறுவதற்கே உதவியிருக்கிறது. சட்டவிரோத மணல் அகழ்வு போன்றவற்றில் ஈடுபடுவது யார் என்று எமது மக்களுக்கு தெரியும்.

ஆகவே, வடக்கு கிழக்கை ஜனாதிபதி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும், தமிழர்களை கட்டுப்படுத்துவதும், ஆயுத படைகளை நிரந்தரமாக நிலைநிறுத்தி வைத்திருப்பதும், வடக்கு கிழக்கின் இயற்கை வளங்களை அபகரிப்பதும், வடக்கு கிழக்கை சிங்கள மக்களை கொண்டு குடியேற்றுவதும், குடிப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துவதும் காலப்போக்கில் வடக்கு கிழக்கை சிங்கள பௌத்த அலகாக ஆக்குவதற்காகவே ஆகும். அதிகாரத்தை பரவலாக்குவதற்கு ஜனாதிபதி மற்றும் ஏனையவர்கள் தயங்குவது இந்த நோக்கங்களை மனதில் கொண்டே ஆகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!