உள்ளாட்சித் தேர்தல்: சுயேச்சையாக நின்று வெற்றிபெற்ற கல்லூரி மாணவி!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் காட்டிநாயக்கன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சாரதி(வயது45). அ.தி.மு.க. பிரமுகரான இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவராவார். இவரது மகள் சந்தியா ராணி (21). இவர், கர்நாடகா மாநிலம் மாலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ., 3-ம் ஆண்டு படித்து வருகிறார். காட்டிநாயக்கன்தொட்டி பஞ்சாயத்துக்கு பெண்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதால் ஜெய்சாரதி தனது மகள் சந்தியா ராணியை வேட்பாளராக நிறுத்தினார். இவரை எதிர்த்து 3 பெண்கள் போட்டியிட்டனர். காட்டிநாயக்கன்தொட்டி பஞ்சாயத்தில் பதிவான ஓட்டுகள் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று எண்ணப்பட்டன. இதில், சந்தியாராணி 1056 ஓட்டுக்கள் பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனிதாவை விட 108 ஓட்டுக்கள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை மாணவி ஒருவர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இதுவே முதல் முறையாகும். வெற்றி பெற்ற மாணவியை கிராம மக்கள் வாழ்த்தினர்.

பஞ்சாயத்து தலைவியாக தேர்வு செய்யப்பட்ட கல்லூரி மாணவி சந்தியா ராணி நிருபர்களிடம் கூறியதாவது:- எனது படிப்பு இந்த ஆண்டு நிறைவு பெறும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டியது அதிகமாக உள்ளது. அதில் முழுமையான கவனம் செலுத்தி மக்களுக்கு சேவை செய்ய பாடுபடுவேன். தற்போது கல்லூரிக்கு சென்று வருவதால் மாலை நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் என்னிடம் மக்கள் குறைகளை தெரிவிக்கலாம். படிப்பு முடிந்ததும் முழு நேரமாக மக்களுக்கு சேவை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!