13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது!

13 ஆவது அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில சரத்துக்கள் நடைமுறை சாத்தியமற்றது எனவும் எனவே அரசியல் ரீதியாக ஒரு மாற்று வழியை கண்டறிவதே முக்கியம் எனவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவருக்கும் இடையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையை முதலீட்டு மையமாக கருதி அதற்கு தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் இலங்கையின் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவரை தெளிவுபடுத்தியுள்ளார்.

இலங்கை போன்ற சிறிய நாட்டினது பொருளாதார வேகத்தை ஏனைய நாடுகளுக்கு ஒப்பான முறையில் முன்னெடுத்து அதனூடாக பிராந்திய நாடுகள் அதிகாரத்தை எதிர்பார்ப்பது சிறப்பானதாக அமையும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெர்டு , இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோன் ரோட், இலங்கைக்கான பிரதி இத்தாலிய தூதுவர் அலெக்ரா பைஸ்ட்ரோச்சி , இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் தஞ்சா கோங்ரிஜ்ப், இலங்கைக்கான ருமேனிய தூதுவர் விக்டர் சியுஜ்தியா மற்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூது குழு அதிகாரி டெனிஸ் சைபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன் போது அபிவிருத்தி மற்றும் அதிகார பரவலாக்கல் தொடர்பிலும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் கவனம் செலுத்தினர்.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அரசியல் தீர்வு என்பது அபிவிருத்தியோடு சேர்த்து முன்னெடுக்கபட வேண்டியது என கூறினார்.

அத்துடன் 13 ஆவது அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில சரத்துக்கள் நடைமுறை சாத்தியமற்றது எனவும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

எனவே அரசியல் ரீதியாக ஒரு மாற்று வழியை கண்டறிவதே முக்கியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதன் மூலம் பொலிஸார் அரசியல் மயப்படுத்தப்படுவர் என ஜனாதிபதி உதாரணமாக எடுத்துக்காட்டினார்.

பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளாக மாகாண சபைகளை சேர்ந்தவர்கள் மற்றும் மாவட்ட ரீதியானவர்களை நியமிக்கப்படுவது நடைமுறை சாத்தியமானது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

காரணம் மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகளால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க இந்த நடைமுறை உதவும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!