எனக்கு எதிராக திலங்க சுமதிபால, ஹத்துருசிங்க ஆகியோர் வழக்குத் தாக்கல் – ஹரீன்

விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில் அந்தத் துறையிலும், கிரிக்கெட்டிலும் காணப்படும் மோசடிகள் மற்றும் முறைகேடுகளை இல்லாமல்செய்து விளையாட்டுத்துறையை முன்நோக்கிக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளையே கடந்தகாலத்தில் நான் மேற்கொண்டிருந்தேன்.

ஆனால் அவ்வாறு நாட்டை முன்நிறுத்தி செயற்பட்டமைக்காக தற்போது வழக்குகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்று முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

தற்போது திலங்க சுமதிபால, சனத் ஜயசுந்தர மற்றும் சந்திக ஹத்துருசிங்க ஆகியோரால் என்மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

அவர்களில் திலங்க சுமதிபால நாட்டின் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரை தனக்கு சார்பாக வாதிடுவதற்கு நியமித்திருக்கிறார். ஆனால் அதற்கேற்றவாறான வசதி வாய்ப்புக்கள் என்னிடமில்லை என்பதால், இதுகுறித்த உண்மை நிலையைத் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கிறேன்.

உண்மையில் கடந்த காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில் அந்தத் துறையிலும், கிரிக்கெட்டிலும் காணப்படும் மோசடிகள் மற்றும் முறைகேடுகளை இல்லாமல்செய்து விளையாட்டுத்துறையை முன்நோக்கிக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளையே மேற்கொண்டோம். ஆனால் நாட்டை முன்நிறுத்தி செயற்பட்டமைக்காகவே தற்போது வழக்குகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!