பீடி வாங்கி தர மறுத்த பொலிஸ்: விலங்கால் தாக்கிய கைதி!

கேரள மாநிலம் திருச்சூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக உள்ளவர்கள் ஜோயி கே. ஜோகி (வயது 34). மற்றும் மனுகிருஷ்ணன் (32). இவர்கள் நேற்று திருச்சூர் வியியூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எர்ணாகுளத்தை சேர்ந்த எண்ணஷா (30) என்பவரை திருச்சூர் கோர்ட்டுக்கு அழைத்துச்செல்லும் பணிக்கு அனுப்பப்பட்டனர். கைதி எண்ணஷா பல வழக்குகளில் தண்டனை பெற்று அடைக்கப்பட்டுள்ளார். மற்றொரு வழக்கு விசாரணைக்காக நேற்று எண்ணஷாவை போலீஸ்காரர்கள் திருச்சூர் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு நேரமானது.இதனால் கைதி எண்ணஷா தனக்கு பசிக்கிறது. சாப்பாடு வேண்டும் என்று கேட்டார். இதனையடுத்து கோர்ட்டு ஊழியர்களிடம் கூறி விட்டு கைதியை போலீஸ்காரர்கள் அங்குள்ள கேண்டீனுக்கு அழைத்துச்சென்று சாப்பாடு வாங்கி கொடுத்தனர்.

சாப்பிட்ட பின்னர் தனக்கு பீடி வேண்டும் என்று போலீஸ்காரர் ஜோயி கே. ஜோகியிடம் கேட்டார். பீடி வாங்கி தரமுடியாது என்று அவர் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கைதி கையில் போடப்பட்டிருந்த விலங்கால் போலீஸ்காரர் ஜோயி கே. ஜோகியின்கண் மற்றும் தலையில் தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடன் சென்ற போலீஸ்காரர் மனுகிருஷ்ணன் கைதியை பிடித்து சமாதானம் செய்து வைத்தார். அங்கிருந்தவர்கள் காயம் அடைந்த போலீஸ்காரரை மீட்டு திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கைதி எண்ணஷா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!