பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்படாமை குறைபாடல்ல – பந்துல

பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்படாமை பெரிய குறைப்பாடல்ல என்று அமைச்சர் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ‘இடைக்கால அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்படாமை பெரிய குறைப்பாடல்ல.

தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு ஜனாதிபதி அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முப்படையினரை ஈடுப்படுத்தியுள்ளார்.

எமது அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படும், அதற்கான தேவையும் காணப்படுகின்றன.

தேசிய பாதுகாப்பு தொடர்பாக முப்படைகளின் தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதிக்கு தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலாளர், மற்றும் பாதுகாப்பு பிரதானிகள் மாத்திரமே கலந்துக் கொள்வார்கள்.

பாதுகாப்பு சபை கூட்டத்தின் இரகசிய தீர்மானங்கள் பகிரங்கப்படுத்தப்படாது. அதற்கான நடவடிக்கைகள் மாத்திரமே முறையாக மேற்கொள்ளப்படும்.

பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்படாத விடயத்தை எதிர்தரப்பினர் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

கடந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சர், இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு செயலாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தும். முன்னறிவித்தல் விடுக்கப்பட்ட ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை தவிர்க்க முடியவில்லை.

தேசிய பாதுகாப்பு விடயங்கள் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

இதன் காரணமாகவே பாரிய விளைவு ஏற்பட்டன இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளுக்கு இனி இடமளிக்க முடியாது.

நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டே ஜனாதிபதி பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை எடுக்கின்றார். பாதுகாப்பு சபையின் தீர்மாங்களை கேள்விக்குற்படுத்த முடியாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!