கொரோனா வைரஸ் தாக்கம் – 24 மணிநேர சேவைக்கான தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்தது இலங்கை தூதரகம்!

24 மணி நேர உடன் தொலைபேசி இலக்கம் ஒன்றை சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த தொலைபேசி இலக்கத்தினூடாக கொரோனா வைரஸ் தொடர்பாக சீனாவில் உள்ள இலங்கை மக்கள் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். அதற்கமைய 0086-10-65321861/2 என்ற தொலைபேசி இலக்கத்தையே இலங்கை தூதரகம் அறிமுகம் செய்துள்ளது. சீனாவின் வுஹான் நகரத்தை தாக்கியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1,925 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த சீனா கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது. சட்டவிரோதமாக வனவிலங்குகளை விற்பனை செய்து வந்த மத்திய சீன நகரமான வுஹானில் உள்ள கடல் உணவு சந்தையில் கடந்த ஆண்டு பிற்பகுதியில் உருவாகியிருக்கலாம் என நம்பப்படும் இந்த வைரஸ், பீய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களுக்கு பரவியுள்ளது.

இதேவேளை இந்த வைரஸ் சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான், பிரான்ஸ், கனடா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் பரவியுள்ளதுடன் இதனால் அந்நாடுகளில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தவைரஸ் குறித்து முன்னதாகவே முன்னெச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவின் ஜோன் ஹோப்கின்ஸ் வைத்திய ஆய்வு நிறுவனமானது, இவ் வைரஸ் காரணமாக 18 மாதங்களில் 65 மில்லியன் மக்கள் உயிரிழப்பார்கள் என்று எச்சரிக்கை வெளியிட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!