பூஜித்தின் அடிப்படை உரிமை மனுவின் பிரதிவாதியாக மைத்திரி

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை பெயரிட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இன்று மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை ஏற்ற, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, உச்ச நீதிமன்ற நீதிபதிகளான துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் அதற்கான அனுமதியை வழங்கியது.

தன்னை, கட்டாய விடுமுறையில் அனுப்பிய முடிவு அரசியலமைப்பிற்கு முரணானது என தெரிவித்து, பூஜித் ஜயசுந்தர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு தொடர்பிலான பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பெயரிடுவதற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, மனுதாரர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் முன்வைத்த விடயங்களை பரிசீலித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழு, வழக்கை எதிர்வரும் மே 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பை மீறும் வகையில் தன்னை கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுத்ததாக மனுதாரரான பூஜித் ஜயசுந்தர தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசியலமைப்புக்கு அமைய, அவ்வாறு செய்ய அவருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!