தமிழில் தேசிய கீதம் பாடினால் சுதந்திரம் கிடைத்து விடுமா?

தமிழில் தேசியக் கீதத்தைப் பாடினால் மட்டும், எங்களுக்கான சுதந்திரம் கிடைத்து விடுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்.

“தேசிய கீதம் தமிழில் பாடப்படத்தான் வேண்டும். ஆனால் இந்த நாடு சுதந்திரமடைந்து 72 வருடங்களாயிற்று. ஆனால் தமிழ் பேசும் மக்களாகிய எங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை.

72 வருடங்களாக சுதந்திரம் கிடைக்காத எங்களுக்கு, தமிழில் தேசியக் கீதம் பாடுவதால் மட்டும்சுதந்திரம் கிடைத்து விடாது. மேலும், தமிழில் பாடுவதால் சுதந்திர தினத்தை நாங்கள் விரும்பிக் கொண்டாடுகிறோம் என்றும் ஆகிவிடாது.

தேசியக் கீதம் தமிழிலும் பாடப்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், எமக்கு சுதந்திரம் கிடைக்கவில்லையே. சுதந்திரம் கிடைக்காத எமக்கு, தேசியக் கீதத்தை தமிழில் பாடினால் என்ன? சிங்களத்தில் பாடினால் என்ன?

அல்லது தமிழில் தேசியக் கீதத்தைப் பாடினால் மட்டும், எங்களுக்கான சுதந்திரம் கிடைத்து விடுமா?

எமக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. சிங்களப் பெரும்பான்மை மக்கள் மத்தியில் இனவாதத்தைப் பரப்பி தங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக, தமிழ் மொழியை தவிர்க்கும் இவ்வாறான செயற்பாடுகளை சிங்கள அரசியல்வாதிகள் மேற்கொள்கின்றனர். அதேபோன்று, தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இந்த விடயம் தீனி போட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பு, அதற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த தமிழ் அரசியல்வாதிகள், எல்லாவற்றையும் கோட்டை விட்ட நிலையில், இப்போது தமிழில் தேசியக் கீதம் பாடவில்லை என்பதை ஒரு பிரச்சினையாக உயர்த்திப் பிடிக்கின்றனர்.

தமிழ் அரசியல்வாதிகள் – சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டு, இப்போது தமிழ் மக்களுக்கு இது மட்டும்தான் பிரச்சினை என்பது போல் காட்டிக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!