தாய் கொலை… அந்தமானில் நண்பருடன் சுற்றுலா!- பெண்ணை வளைத்த போலீஸ்

பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற இளம்பெண் தன் நண்பருடன் சுற்றுலாவுக்காக அந்தமான் தீவுகளுக்குச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். அவரது கைது பின்னால் இருக்கும் தகவல்கள் அதிர்ச்சிகரமாக இருக்கின்றன. நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த தாயைக் கொலை செய்துவிட்டு தன் தம்பியைக் கொலை செய்யும் நோக்கில் தாக்கிவிட்டு நண்பருடன் அந்தமான் விரைந்துள்ளார் அம்ருதா. அவரது சகோதரர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கினர். அம்ருதா ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் செல்வது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அவர்கள் பயணித்த இருசக்கர வாகனம் இறுதியாக விமானநிலையத்தை அடைந்தது தெரியவந்தது. விமான நிலையத்தில் நடத்திய விசாரணையில் அம்ருதா மற்றும் அவரது நண்பர் ஸ்ரீதர் ராவ் இருவரும் பிப்ரவரி 2-ம் தேதி அந்தமானுக்கு டிக்கெட் புக் செய்துள்ளனர்.

இதையடுத்து பெங்களூரு காவல்துறையினர் தாயைக் கொலைசெய்துவிட்டு அந்தமானுக்குச் சுற்றுலா சென்ற அம்ருதாவையும் அவரது ஆண் நண்பரையும் கைது செய்தனர். கடன் பிரச்னை காரணமாக இந்தக் கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது.

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், “அம்ருதா ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவரது தந்தையின் மருத்துவச் செலவுக்காக 2013-ம் ஆண்டு 4 லட்சம் ரூபாய் லோன் வாங்கி சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இருந்தும் அவரை இவர்களால் காப்பாற்ற முடியவில்லை. உரிய நேரத்தில் பணத்தைத் திரும்பச் செலுத்தாததால் கடன்தொகை பெருகியது. தற்போது 18 லட்சமாக இருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதன்காரணமாக வீட்டிலும் தன் தாய் நிர்மலாவுடன் பிரச்னை எழுந்துள்ளது. அம்ருதா 2017-ம் ஆண்டிலிருந்து வேலைக்குச் செல்வது இல்லை. வீட்டில் இருந்தபடியே சில புராஜெக்ட்களைச் செய்து கொடுத்துவந்துள்ளார். அவரது சகோதரர் ஹரீஷ் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார்.

கடன் பிரச்னையுடன் வாழ விரும்பாத அம்ருதா. தன் தாய் மற்றும் சகோதரனைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். பிப்ரவரி 2-ம் தேதி அதிகாலையில் வீட்டில் அலமாரி அருகே ஏதோ சத்தம் கேட்டுள்ளது. ஹரீஷ் கண் விழித்துப் பார்த்தபோது அம்ருதா உடைகளை எடுத்து பேக் செய்துள்ளார். ஹரீஷ் இதுகுறித்து கேட்டதற்கு சுற்றுலா செல்வதாகக் கூறியுள்ளார். ஹரீஷ் மீண்டும் உறங்கச் சென்றுவிட்டார்.

சில நிமிடங்களில் சமையலறையில் இருந்த கத்தியைக் கொண்டு தாய் நிர்மலாவைக் கொலை செய்துள்ளார். உறக்கத்தில் இருந்த ஹரீஷையும் கத்தியைக் கொண்டு தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் தாய் மற்றும் சகோதரனைத் தவிக்கவிட்டு விட்டு நண்பருடன் அந்தமான் பயணமாகியுள்ளார். இதையடுத்து கடுமையான காயங்களுடன் இருந்த ஹரீஷ் தன் உறவினருக்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார். பின்னர் அவர்கள் காவல்நிலையத்தைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர்.

அம்ருதாவின் நண்பரான ஸ்ரீதர் ராவின் செல்போன் அழைப்புகளைக்கொண்டு அவரை ட்ரேஸ் செய்தோம். ஸ்ரீதருக்குக் கொலை குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. அம்ருதாவுக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்துக்காக அவரைக் கைது செய்துள்ளோம். அவரது தற்கொலை முடிவு குறித்தும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்தமான் செல்வது குறித்து முன்னரே திட்டமிட்டுள்ளனர். மூன்று நாள்கள் அம்ருதாவுடன் இருந்துள்ளார். ஆனால், அவருக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லையா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. அம்ருதாவும் இந்தக் கொலையில் ஸ்ரீதரைச் சிக்கவைக்க விரும்பவில்லை. அம்ருதாவின் சகோதரர் ஹரீஷ் கூறியதும் அம்ருதா கூறுவதும் சற்று முரணாகத்தான் இருக்கிறது. விசாரணைக்குப் பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும்” என்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!