காணாமல் போனவர்கள் எவ்வாறு இறந்தனர்?- வெளிப்படுத்தக் கோருகிறார் ஹரி ஆனந்தசங்கரி

காணாமல் போனவர்கள் இறந்து விட்டனரா? அப்படியானால் அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்று கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி கேள்வியெழுப்பியுள்ளார். கனடிய பாராளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“காணாமல் ஆக்கப்படுதல், வெள்ளை வான்களில் ஆட்களை கடத்தி காணாமல் ஆக்குவது தொடர்பாக இலங்கை நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது.

காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களை நான் சந்தித்தேன். அவர்கள் காணாமல் போன தமது அன்புக்குரியவர்களுக்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

2009ம் ஆண்டு மே மாதம் தனது கணவரையும் ஏனையோரையும் இராணுவ பேருந்தில் அழைத்துச் சென்றதை ஆசிரியை ஒருவர் பார்த்துள்ளார். அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட ஆண்களும், பெண்களும் காணாமல் போயுள்ளனர்.

இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காணாமல் போனவர்கள் இறந்து விட்டார்கள் கடந்த மாதம் கூறியிருந்தார். காணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலர் கனடாவில் வசிக்கின்றனர்.இவர்கள் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்று கேள்விக்கு பதில் கேட்கின்றனர். காணாமல் போனவர்கள் இறந்து விட்டனரா, எவ்வாறு அவர்கள் இறந்தனர்?அவர்களின் மரணத்திற்கு யார் பொறுப்புக் கூற வேண்டும் என கேட்கின்றனர். உண்மை மற்றும் நிதிக்காக சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோருகின்றனர். இது தற்போது கட்டாயம் தேவையானது என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!