வடக்கு மாகாணம் வேறு நாட்டிற்கு சேர்ந்ததில்லை அதையும் ஏனைய மாகாணங்களை போல நடத்துங்கள் – ம.வி.மு

வடமாகாணத்தில் அதிகமான சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பயணிகளிடம் சோதனை செய்துவரும் பாதுகாப்பு பிரிவினரின் செயற்பாடுகளுக்கு மக்கள் விடுதலை முன்னணி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு சோதனைச் சாவடிகள் அடுக்கடுக்காக இடப்பட்டுள்ளதால் தமிழ் மக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் ஓரங்கட்டிவருகின்றது என்ற உணர்வே ஏற்பட்டுள்ளது என்றும் அந்த கட்சி கூறியுள்ளது.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“வவுனியா தொடக்கம் கிளிநொச்சி வரை மூன்று இடங்களில் பயணிகள் பேரூந்திலிருந்து இறக்கப்பட்டு சோதனையிடப்படுகின்றது. பேரூந்துகளில் சோதனை நடத்தப்படுகின்றது.

போதைப்பொருள் இருப்பதாக சந்தேகப்பட்டுதான் பரிசோதனை நடத்தப்படுவதாக கூறுகிறார்கள். ஆனால் பண்டாரகமையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டாலும் கிளிநொச்சியில் சோதனை நடத்தப்படுகின்றது.

அதனால் இந்த செயற்பாடானது தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடாகவே காண்கின்றோம்.

கடந்த தேசிய சுதந்திர தினத்தன்று தமிழ் மக்கள் காலகாலமாக பாடிவருகின்ற தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதற்கும் புதிய அரசாங்கம் அனுமதிக்கவில்லை.

இவ்வாறு ஓரங்கப்பட்டப்படுகின்ற அரசியல் முறைமையை முன்னெடுத்துவருகின்ற காலகட்டத்தில் சோதனைச் சாவடிகளும் அதிகமாக அமைக்கப்பட்டு மேலும் தமிழ் மக்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என கோருகின்றோம்.

சோதனை நடவடிக்கைகளை செய்யுங்கள். ஆனால் வடக்கு மாகாணத்தை ஒருவிதமாக நடத்தவேண்டாம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!