பெரும்பான்மை எமக்கே – சி.பி.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் போன்று நாடாளுமன்றத் தேர்தலிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெறும் என இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்தார்.

கொத்மலை பகுதியில் இன்று (21) நடைபெற்ற சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார். மேலும்,

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று எமது தரப்பு ஆட்சியமைத்திருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கையிலுள்ள நிதியை பயன்படுத்தியே நிர்வாகம் நடைபெற்று வருகின்றது.

கடந்த ஆட்சியின் போது வீதி புனரமைப்பு உட்பட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்த ஒப்பந்தக்காரர்கள், உரம் வழங்கியவர்கள் என பல தரப்புகளுக்கும் செலுத்த வேண்டிய கட்டணங்கள் செலுத்தப்படவில்லை.

இவற்றைச் செலுத்தி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காகவே மேலதிக நிதிகோரி இடைக்கால கணக்கறிக்கையொன்றை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

நாடாளுமன்றத்தில் எமக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், அதனைத் தோற்கடித்து குறுகிய அரசியல் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவரும் அவரது கட்சி உறுப்பினர்களும் முயற்சித்தனர். இதனால், நிதி அறிக்கையை அரசாங்கம் மீளப்பெற்றது.

அரசாங்கம் இவ்வாறு மீளப்பெற்றமை தங்களுக்குக் கிடைத்த வெற்றியென அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியானது மேலும் பிளவடைந்து வருவதைக் காணமுடிகின்றது.

அதேவேளை, இந்த நாட்டில் சமூகம், பொருளாதாரம், கலாசாரம், தனித்துவம் என அனைத்தும் ஐக்கிய தேசியக் கட்சியால் சீரழிக்கப்பட்டன. இதன்காரணமாகவே கட்சி, நிறம் ஆகியவற்றை மறந்து தமக்கென தாய் நாடும், தேசிய அடையாளங்களும் வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி தேர்தலின்போது ஓரணியில் மக்கள் திரண்டார்கள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அமோக ஆதரவை வழங்கினீர்கள்.

எனவே, அடுத்த பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதே எமது எதிர்பார்ப்பாகும். இந்நிலையில், உள்ளாட்சி மற்றும் ஜனாதிபதி தேர்தல்போல் நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்கள் அமோக ஆணையை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!